தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் மனதில் எழும் முக்கியமான கேள்வி ஒன்று உண்டு. தங்கத்தின் விலை தினசரி மாறினாலும், நகைக்கான சேதாரம் (Making Charges) மட்டும் ஏன் எப்போதும் சதவிகித அடிப்படையில் நிலையாக இருக்கிறது? இது வெறும் கூடுதல் லாபத்திற்காக வசூலிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இந்த சந்தேகம் குறித்து நிதி ஆலோசகர் பிரேம் சோனி என்பவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அளித்துள்ள விளக்கம், இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதன் உண்மையான காரணத்தை மக்கள் புரிந்துகொள்ள உதவுகிறது.
சேதாரம் என்பது பணம் அல்ல : பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சேதாரம் என்பது கூடுதல் லாபம் என்று கருதுகின்றனர். ஆனால், "சேதாரக் கட்டணங்கள் சதவிகித அடிப்படையில் இருப்பதற்கு முக்கியக் காரணம், உற்பத்தி இழப்பு என்பது ரூபாய் மதிப்பில் அல்ல, கிராம் மதிப்பில் இருக்கிறது. இதுதான் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய உண்மை" என்று சோனி கூறியுள்ளார்

அதாவது, நகை செய்யும் போது பட்டை தீட்டுதல், இணைத்தல், மெருகூட்டுதல் போன்ற பல வேலைகளால், தங்கம் சிறிய அளவில் இழக்கப்படுவது அல்லது வீணாவது இயல்பு. இதற்கு Wastage என்றும் ஒரு பெயர் உண்டு. ஒரு நகை செய்ய 5 கிராம் தங்கம் வீணாகிறது என்று வைத்துக்கொள்வோம்.
நகை செய்யும் போது வீணாகும் தங்கத்தின் எடை மாறாது. ஆனால், அதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50,000 என்று இருக்கும்போது, வீணாகும் 5 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.25,000 ஆக இருக்கும்.
அதே 5 கிராம் தங்கம், விலை ஏறி 10 கிராமுக்கு ரூ.1,30,000 என்று இருந்தால், அதன் மதிப்பு ரூ.65,000 ஆக உயர்ந்துவிடும். வீணான தங்கத்தின் எடை (5 கிராம்) ஒரே அளவாக இருந்தாலும், சந்தை விலைக்கு ஏற்ப அதன் மதிப்பு ரூ.25,000-இல் இருந்து ரூ.65,000 ஆக உயருகிறது. இந்தக் கூடுதல் மதிப்பை ஈடுகட்டத்தான், நகைக் கடைக்காரர்கள் சேதாரத்தை சதவிகித அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கிறார்கள்.
நிலையான கட்டணம் ஏன் சாத்தியமில்லை..?: சேதாரத்தை நிலையான தொகையாக (உதாரணமாக ரூ.5,000) வசூலித்தால் என்ன ஆகும்? தங்கத்தின் விலை உயரும்போது, கடைக்காரர்கள் வீணாகும் தங்கத்தின் மதிப்புக்கு ஈடாக கட்டணம் வசூலிக்க முடியாமல், நஷ்டத்தை சந்திப்பார்கள். இதனால், இந்த தொழிலை சரியாக நடத்தவே முடியாது.
சதவிகித அடிப்படையிலான கட்டணம், வீணான தங்கத்தின் மதிப்பை சரியாக ஈடு செய்வதுடன், நகையை செய்த கைவினைஞர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதையும், சிக்கலான வடிவமைப்புகளை தயாரிக்கும் தொழிலை நிலையாக நடத்துவதையும் உறுதி செய்கிறது. அதாவது, இந்தச் சேதாரக் கட்டணம் என்பது வெறும் லாபத்திற்கான தொகை அல்ல; இது தொழிலுக்கு தேவையான ஒரு கட்டாய செலவு என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நிதி ஆலோசகர் பிரேம் சோனி வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications