முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக மதுரையில் இருந்து துவங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா கிராம் தங்க மோதிரத்தைத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் 107 அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுத் தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக 1.28 தங்க மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தை எப்படிப் பல முன்னணி நிறுவனங்கள் மத்தியில் போட்டிப்போட்டு வெறும் 1 பைசாவுக்கு ஜோய் ஆலுக்காஸ் வாங்கியது தெரியுமா..?
முதல்வர் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதியைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் சுமார் 4,41,667 1 கிராம் 22 கேரட் தங்க மோதிரத்தை வாங்குவதற்காக டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் தங்கத்தின் விலையைத் தாண்டி, தங்க மோதிரம் செய்வதற்காகவும், இன்சூரன்ஸ், போக்குவரத்து செலவு, BIS ஹால்மார்க்கிங் செலவுகள் என இதர செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதன் அடிப்படையில் பிட்டிங் செய்யக் கோரப்பட்டது.
இந்த திட்டத்திற்கான செலவு எனத் தமிழ்நாடு அரசு 755 கோடி ரூபாய் என மதிப்பிட்டு அதற்கான நிதியை ஒதுக்குவதாக முதல்வர் விஜய் ஜூலை மாதம் கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்த நிலையில் சுமார் 11 தங்க நகைக் கடை பிராண்டுகள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான தங்க மோதிரங்களைத் தயாரித்துக் கொடுக்க போட்டிப்போட்டது.
11 நிறுவனங்கள் போட்டி..
இதில் சென்னையின் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் 15000 ரூபாய்க்கும் அதிகமான தொகையும், வும்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் 822.97 ரூபாயும், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் 410.97 ரூபாயும் டெண்டர் விண்ணப்பம் மூலம் கோரியிருந்தது.
ஆனால் ஜோய் ஆலுக்காஸ் தங்கம் விலையை தவிர்த்து இதர அனைத்து செலவுகளுக்கும் வெறும் 0.01 பைசா தொகையைப் பெற்றுக்கொண்டு 4,41,667 தங்க மோதிரம் சப்ளை செய்வதாக டெண்டர் விண்ணப்பம் செய்தது மூலம் இத்திட்டத்தை வென்றது.
ஆனால் தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த இதர 10 நகைக் கடை பிராண்டுகளிடம் L1 ஆன ஜோய் ஆலுக்காஸ்-க்கு இணையான தொகைக்குத் தங்க மோதிரத்தை சப்ளை செய்ய முடியுமா எனக் கேட்ட நிலையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் L1 விலையை ஏற்று சப்ளை செய்ய ஒப்புக்கொண்டது.
இதன் வாயிலாக 4,41,667 தங்க மோதிரம் சப்ளை செய்யும் திட்டத்தில் 70 சதவீதத்தை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும், 30 சதவீதத்தை கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனமும் அளிக்கத் தமிழ்நாடு உத்தரவிட்டது.
1 பைசா விளக்கம்
1 பைசா விலை குறித்து பெரும் சர்ச்சை வெடித்தது மட்டும் அல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதுகுறித்து ஜோய் ஆலுக்காஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விலை அளவீடு வணிக ரீதியான லாபத்தை நோக்கமாகக் கொண்டது அல்ல, மாறாகத் தமிழ்நாடு முழுவதும் லட்சக் கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் நிலையில், அதற்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்பாகக் கருதிக் குறைந்த லாப வரம்புடன் முன்வைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
சரி ஏன் 4,41,667 தங்க மோதிரம்..?
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கிறது. இதில் சுமார் 4.20 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் காரணத்தால் விஜய் தலைமையிலான அரசு 4.41 லட்சம் மோதிரங்களை வாங்குவதற்காக டெண்டர் விட்டது.
இத்திட்டம் முதலில் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் செப்.28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
