இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் கையில் பணம் சேரும் போதெல்லாம் தங்க நகையாக வாங்கி வைப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக மாற்றி பணமாக மாற்ற கூடிய பொருள் தங்கம் தான்.
இந்தியாவில் இப்போது கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள், கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருந்தாலும் இவற்றை வைத்து நாம் கடன் வாங்க முடியாது. இதனால் தான் இன்று வரை இந்தியாவில் அசைக்க முடியாத ஒரு சந்தையாக தங்க நகை விற்பனையும், தங்க கடன் சந்தையும் இருக்கிறது . அரசு பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இங்கே நாம் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர ஆர்பிஐ-ஆல் ஒழுங்கமைக்கப்படாத உள்ளூர் நகை அடகு கடைகளும் செயல்படுகின்றன. ஆர்பிஐ கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைப்பது தான் பாதுகாப்பானது. அதே போல உங்களுக்கு ஒரு சீரான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். இதுவே உள்ளூரில் இருக்கக்கூடிய நகை அடகு கடைகள் என்றால் உங்களுக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும், ஆனால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அங்கே வட்டி அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது .
இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்க நகை கடன்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை வங்கிகளுக்கு வழங்கும். குறிப்பாக ஒரு கிராம் தங்கத்திற்கு எவ்வளவு தொகையை அதிகபட்ச கடனாக வழங்கலாம் என்ற அறிவுரையையும் வழங்கும். இதனை ஆங்கிலத்தில் Loan to Value Ratio என அழைக்கிறார்கள். ரிசர்வ் வங்கி இந்த விகிதத்தை அறிவிக்கும் அதன் அடிப்படையில் வங்கிகள் தங்க நகைகளுக்கு அதிகபட்ச கடன் தொகையை நிர்ணயம் செய்யும்.
ரிசர்வ் வங்கி அண்மை காலமாக தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் வங்கிகள் தங்க நகை கடன் பிரிவில் கவனமாக இருக்க வேண்டும் என வாய்வழி அறிவுரையாக வழங்கி இருப்பதாக தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது. திடீரென தங்கம் விலை குறைந்துவிட்டால் வங்கிகளிடம் அடமானமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு குறைந்து , வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்பதை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இதனை அடுத்து வங்கிகள் Loan to Value Ratioஐ குறைத்துள்ளன என்றும் அந்த செய்தி கூறுகிறது. அதாவது வங்கிகளும் வங்கி சாராத நிதி நிறுவனங்களும் இது நாள் வரை Loan to Value Ratioஐ 70 லிருந்து 75 சதவீதமாக கொண்டிருந்தன. உதாரணமாக ஒரு சவரன் தங்க நகை தற்போது சந்தையில் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் படி பார்த்தால் வங்கியில் 1 சவரன் நகையை அடகு வைக்கும் போது அதிகபட்சமாக அந்த நகைக்கு வங்கிகள் 75,000 ரூபாய் வரை கடன் வழங்கும்.
ஆனால் வங்கிகள் Loan to Value Ratioஐ தற்போது 60 முதல் 65 சதவீதம் என குறைத்து விட்டதாக தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது. அப்படி பார்க்கும்போது உங்களுடைய ஒரு சவரன் தங்க நகைக்கு இனி 60,000 ரூபாய் முதல் 65,000 ரூபாய் வரை மட்டுமே கடன் கிடைக்கும். வங்கிகளுக்கு இது ஒரு சாதகமான விஷயம், ஆனால் பொதுமக்களுக்கு பொருத்தவரை இது நல்ல செய்தி அல்ல.
1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு 60% தொகை தான் கடன் கிடைக்கும் என்றால் மக்கள் எதிர்ப்பார்க்கும் கடன் தொகை கிடைக்காது. அதிக மதிப்புள்ள நகையை அடகு வைத்தாலும் நமக்கு குறைவான தொகையே கடனாக கிடைக்கும் . இது உடனடியாக பணத்தேவை இருப்பவர்கள் , சிறு தொழிலுக்காக நகைகளை அடகு வைப்பவர்கள், விவசாயத்திற்காக நகை கடன் வாங்குபவர்கள், வணிகர்கள், மருத்துவ தேவைக்காக கடன் வாங்குபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
ஏனென்றால் அவர்கள் எதிர்பார்த்ததை விட குறைந்த தொகை கடனாக கிடைக்கும். குறைந்த வட்டி கிடைக்கிறது, உடனடியாக பணம் கிடைக்கிறது என்பதற்காகத்தான் மக்கள் தங்க நகைகளை அடகு வைக்கிறார்கள் . ஆனால் அதில் எதிர்பார்க்கும் தொகை கிடைக்காது எனும் போது பண தேவைக்காக அவர்கள் மாற்று வழிகளை நாடும் நிலை உண்டாகும்.
மக்கள் பண தேவைக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் அமைப்புகளான வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்களில் இருந்து ஒழுங்குபடுத்தப்படாத அமைப்புகளான நகை அடகு கடைகளை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். அங்கே அதிக வட்டி கொடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாக நேரிடும்.


Click it and Unblock the Notifications