இந்தியாவில் தற்போது பெரும்பாலான நபர்கள் கையில் ரொக்கமாக பணத்தை கொண்டு செல்வது கிடையாது. ஏனெனில் பெரும்பாலான பணப்பரிமாற்றம் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. பல்வேறு இடங்களிலும் யுபிஐ சேவை பயன்படுத்துகிறோம். கூகுள் பே, போன்பே, அமேசான் பே , பேடிஎம் போன்ற செயலிகள் மூலமே பல்வேறு பண பரிமாற்றம் நடக்கிறது. அதே வேளையில் குறிப்பிட்ட சில பண பரிமாற்றங்களுக்கு நெட் பேங்க்கை பயன்படுத்துகிறோம்.
டிஜிட்டல் வளர்ச்சி மூலம் பணம் பறிமாற்றம் எளிமையானதாக மாறி இருக்கிறது. அதே வேளையில் யுபிஐ அடிப்படையிலான மோசடிகளும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. எனவே இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பண பரிமாற்ற முறையில் நடைபெறக்கூடிய மோசடிகளை தடுக்க புதிய விதிமுறையை பரிந்துரை செய்திருக்கிறது.

இந்தியாவில் யுபிஐ மற்றும் போனை ஹேக்கிங் செய்து வங்கி கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை வாடிக்கையாளருக்கே தெரியாமல் கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் புதிதாக சில கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கில் சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்து இருக்கிறது.
இதன்படி டிஜிட்டல் முறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை அனுப்பும் போது அந்த பணம் ஒரு மணி நேரம் கழித்து சென்றடையும். இந்த ஒரு மணி நேர இடைவெளியில் இது ஒரு மோசடியான பரிவர்த்தனை என்பதை வாடிக்கையாளர் தெரிந்து கொண்டால் அந்த பரிவர்த்தனையை ரத்து செய்து கொள்ள முடியும்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது அவர்கள் முன்கூட்டியே நியமித்த நம்பகமான நபரின் ஒப்புதலை பெறுவது கட்டாயமானதாக மாற்றப்படும். மேலும் மோசடி நடப்பதாக சந்தேகிக்கும் நேரங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் ஒரே நொடியில் உடனடியாக முடக்கும் சிறப்பு வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் மோசடியில் 551 கோடி மக்கள் இழந்தனர் இதுவே 2025 ஆம் ஆண்டின் 22,931 கோடி ரூபாய் என அதிகரித்திருக்கிறது. அதாவது டிஜிட்டல் மோசடியின் எண்ணிக்கையும் அதில் மக்கள் இழக்க கூடிய பணத்தின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவேதான் ரிசர்வ் வங்கி இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க இருக்கிறது.
இது தொடர்பான வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் வங்கிகள் மே 8ஆம் தேதி வரை இதில் கருத்துக்களை தெரிவிக்கலாம் இதன் பிறகு ரிசர்வ் வங்கி தரப்பில் இறுதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications