தங்கம் வாங்குவதற்கு நாம் கடைகளுக்கு செல்லும் போது தங்கத்தின் தூய்மை, எத்தனை காரட் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி நமது சந்தேகங்கள் அனைத்தும் நிவர்த்தியானால் மட்டுமே அதனை வாங்குவோம்.
24 காரட் என்பது தான் தூய்மையான தங்கம். ஆனால் இந்த 24 காரட் தங்கத்தில் நமக்கு நகைகள் கிடைக்காது. 24 காரட் தங்கத்தில் நாணயம் அல்லது பார்களை தான் வாங்க முடியும். இப்படி நாம் 24 காரட் நாணயங்கள் மற்றும் பார்களை வாங்கும் போது அதில் 999 அல்லது 995 என தூய்மை தன்மை குறிப்பிடப்பட்டு இருக்கும்.

சர்வதேச அளவில் தங்கத்தின் தூய்மையை மதிப்பிடுவதற்கு காரட் மற்றும் நுண்மை (ஆங்கிலத்தில் FINENESS) ஆகிய இரண்டு அளவீடுகள் இருக்கின்றன. உலக தங்க கவுன்சிலின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி காரட் என்பது மற்ற உலோகங்களோடு கலக்கப்பட்ட தங்கத்தின் தூய்மையின் அளவீடு.
24 காரட் தூய தங்கமாக கருதப்படுகிறது. ஏனெனில் அதில் வேறு எந்த உலோகமும் சேர்க்கப்படவில்லை. அதே வேளையில் எந்த ஒரு பொருளிலும் உள்ள தங்கத்தின் அளவை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவது தான் நுண்மை. பொதுவாக இது ஆயிரங்களில் தான் வெளிப்படுத்தப்படும்.
உதாரணமாக 24 காரட் தங்கத்தில் 1.0 நுண்மை இருக்கும் (24/24=1.00) மற்றும் 22 காரட்டில் 0.916 நுண்மை இருக்கும் (22/24=0.916).
எப்படி இருந்தாலும் 100% தூய்மையான தன்மை கொண்ட தங்கம் என இருக்கவே முடியாது. ஏனேனில் இதனை ஆயிரத்திற்கு 999.9 பாகங்கள் என்ற நேர்த்தியான நிலையில் மட்டுமே நம்மால் சுத்திகரிக்க முடியும். அத்தகைய தங்கம் 999.9 நுண்மை கொண்டது (24 காரட் தங்கம்).
995, 999 மற்றும் 999.9 ஆகியவை ஆயிரம் கிராமுக்கு தங்கத்தின் தூய்மையை வரையறுக்க பயன்படுத்தப்படக் கூடிய சர்வதேச அளவீடுகள் தான். இதில் 995 தூய்மை என்றால் ஆயிரம் கிராமில் 5 கிராம் மற்ற உலோகம் இருக்கிறது என அர்த்தம். 999 என்றால் 1 கிராம் மற்ற உலோகம் இருக்கிறது, 999.9 என்றால் 0.1 கிராம் மற்ற உலோகம் சேர்க்கப்பட்டுள்ளது என அர்த்தம் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உலகளவில் 995 நுண்மை கொண்ட தங்கம் நிலையான தங்கமாக பார்க்கப்படுகிறது. இது எம்சிஎக்ஸ் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில், வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
விலையுடன் ஒப்பீடு செய்தால் 999 மற்றும் 999.9 நுண்மை கொண்ட தங்கத்தின் விலை 995 நுண்மை கொண்ட தங்கத்தை விட அதிகமாகவே இருக்கும். பெரும்பாலும் 999, 999.9 நுண்மை கொண்ட தங்கங்கள் (24 காரட்) நாம் காண முடியாது. ஏனெனில் 24 காரட் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. 22 காரட் மற்றும் அதற்கு கீழ் உள்ள தங்கத்தில் மற்ற உலோகங்களை கலந்து தான் நகை செய்ய முடியும்.
இந்தியாவை பொறுத்தவரை 24 காரட் தங்கத்திற்கும் ஹால்மார்க் என்பது கட்டாயம். ஆனால் 24 காரட்டில் தங்க நகை வாங்கினால் மட்டுமே ஹால்மார்க் தேவை, நாணயம் மற்றும் பார்களுக்கு தேவையில்லை.
Story written by: Devika


Click it and Unblock the Notifications