சென்னை:ஆதார் அட்டை என்பது மத்திய அரசு இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படக் கூடிய ஒரு அடையாள அட்டை.
உங்களின் முகவரி மற்றும் புகைப்பட அடையாளச் சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். அண்மை காலமாக பல்வேறு மோசடிகள் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இவற்றிலிருந்து தப்பிக்க எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
பொதுமக்கள் ஆதார் அட்டைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டை மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவக்கூடிய ஐந்து குறிப்புகளை நாம் இங்கு காணலாம்.

1.ஆதார் நகல் எடுக்கும் போது கவனம்: பெரும்பாலான சேவைகளுக்கு ஆதார் அட்டைகள் கேட்கப்படுகின்றன குறிப்பாக ஆதார் அட்டை நகல்களை நாம் வழங்குகிறோம். இவ்வாறு ஆதார் அட்டைகளை நகல் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டை மற்றும் ஆதார் நகல் அந்த கடைகளில் எங்கும் விடப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்களின் ஆதார் தகவல்கள் இதுபோன்ற கடைகளில் இருந்து திருடப்பட்டு தான் பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன.
2.ஆதார் கார்டை அவ்வப்போது புதிப்பித்தல்: ஆதார் மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு எளிமையான வழி உங்களது ஆதார் கார்டை அவ்வப்போது புதுப்பித்து வைப்பது. உங்களது முகவரி மற்றும் பதிவு செய்யப்படும் செல்போன் எண்கள் மாறினால் உடனடியாக ஆதார் மையத்திற்கு சென்று அவற்றை மாற்றி விடுங்கள். ஒருவேளை உங்களது ஆதார் கார்டு தொலைந்து விட்டால் உடனடியாக UIDAI இணையதளத்திற்கு சென்று அது தொடர்பாக ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
3.எந்த இணையதளத்திலும் ஆதார் விவரங்களை வழங்க கூடாது: மோசடிகளை தவிர்க்க உங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த இணையதளத்திலும் ஆதார் அட்டை எண்களை உள்ளீடு செய்வதை தவிர்க்க வேண்டும். நம்பகமான இணையதளங்கள் மற்றும் செயலிகளில் மட்டுமே உங்களின் ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருப்பது அவசியம்.
4. UIDAI தளம்: ஆதார் தொடர்பான எந்த ஒரு தகவல்கள் மட்டும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த ஒரு சந்தேகங்களையும் UIDAI இணையதளத்திற்கு சென்று நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் ஆதார் அட்டை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டை தொடர்பான தகவல்களுக்கு ஆதார் அட்டை ஹெல்ப்லைன் 1947-ஐ அழைக்கலாம். இது தவிர ஆதார் அட்டை தொடர்பான விவரங்களுக்கு மித்ரா என்ற சேட்பாட் UIDAI தளத்தில் உள்ளது.
5.தொலைபேசிகளில் பகிராதீர்: தொலைபேசியில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது ஆதார் விவரங்களை கூறுங்கள் இல்லையெனில் வங்கி கணக்கு முடக்கப்படும், சிம் கார்டு செயலிழந்து விடும் என யாரேனும் கூறினால் பதற்றம் அடையாதீர்கள். ஏனெனில் எந்த வங்கியும் , அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமும் இது போன்ற தகவல்களை ஒரு போதும் உங்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்காது.
Story Written by: devika


Click it and Unblock the Notifications