ஐதராபாத்: பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்பான வாட்ஸ் அப் குழுவில் இணைந்ததால் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நபர் 50 லட்சம் ரூபாயை இழந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்போது பங்குச்சந்தை முதலீடு சார்ந்த நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
பலரும் லட்சக்கணக்கான பணத்தை இதில் கொடுத்து ஏமாந்து வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் பலர் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி தாங்கள் இத்தனை ஆண்டு காலம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐதராபாத் நகரத்தில் 63 வயதான ஒரு நபர் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான வாட்ஸ் அப் குழுவில் இணைந்ததன் மூலம் சுமார் 50 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
ஸ்டாக் டிஸ்கஷன் குரூப் என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் அவர் சேர்ந்துள்ளார். குணால் சிங் என்பவர் தான் புகழ்பெற்ற ஒரு நிதி ஆலோசகர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார். தினம்தோறும் அவர் குறிப்பிட்ட பங்குகள் குறித்து அந்த வாட்ஸ் அப் குழுவில் விவரமாக பதிவிடுவார். மேலும் அவர் குறிப்பிடக்கூடிய பங்குகள் எல்லாம் பல மடங்கு லாபம் தருபவை எனக் கூறி இந்த முதியவரை நம்ப வைத்திருக்கிறார்.
இந்த முதியவர் அவரது அறிவுறுத்தலின் பேரில் ஆன்லைன் பங்குச்சந்தை வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது ஸ்கை ரிங் கேப்பிட்டல் என்ற ஒரு பங்கு வர்த்தக முதலீடு தளத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஆன்லைன் கிளாஸில் கலந்து கொண்டிருக்கும் அனைவரையும் இந்த தளத்தில் முதலீடு செய்ய செய்தனர்.
இந்த தளத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து செய்து லாபம் எடுத்து தந்துள்ளனர்.
முதல் கட்டமாக இந்த முதியவர் ஒரு குறைந்த அளவிலான தொகையை முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்டி உள்ளார். இது இவரது ஆசையை மேலும் தூண்டவே படிப்படியாக 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார்.
பின்னர் அந்த தளத்திலிருந்து தனக்கு கிடைத்த லாபத்தை திரும்ப பெற முயற்சி செய்தபோது அவரால் அந்த லாபத்தையோ அல்லது அவரது முதலீடு செய்த பணத்தையோ திரும்ப எடுக்க முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபோன்ற மோசடியான வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் இதுபோன்ற மோசடி கும்பல்கள் குறித்து உங்களுக்கு தெரிய வரும்போது 1903 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மைக்காலமாக இதுபோல முதலீடு சார்ந்த மோசடிகள் அதிகரித்திருப்பதால் எந்த ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைவதற்கு முன்பும் எந்த ஒரு லிங்கினை கிளிக் செய்து முதலீடு செய்வதற்கு முன்பும் ஒரு முறைக்கு 100 முறைக்கு மேல் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications