ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உணவகங்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் நகரங்களில் ஹைதராபாத்தும் ஒன்று. பல்வேறு ஐடி நிறுவனங்களும் உற்பத்தி நிறுவனங்களும் இங்கே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நகரத்தின் இரவு நேர வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் கடைகள், உணவகங்கள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகரத்தில் கடைகள், நிறுவனங்கள் மற்றும் மதுபான கடைகள் , பார்கள் எந்தெந்த நேரங்களில் செயல்பட வேண்டும் என்பது குறித்த புதிய வழிகாட்டுதல்களை ஹைதராபாத் நகர காவல் துறை வெளியிட்டுள்ளது.

இங்கே கடைகள் வர்த்தக நிறுவனங்கள் உணவகங்கள் போன்றவை கட்டுப்பாடு இன்றி பெரும்பாலான நேரங்கள் திறந்து வைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி உணவகங்கள் நள்ளிரவு ஒரு மணி வரை செயல்படலாம். குறிப்பாக ஐஸ் கிரீம் விற்பனை நிலையங்கள், தாபாக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு விற்பனை கடைகளும் இதில் பொருந்தும். இவர்கள் காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கடைகளை நடத்தலாம். இதற்கு முன்பு இருந்த விதிகளின்படி இந்த கடைகள் நள்ளிரவு 12 மணிக்குள் மூடி விட வேண்டும். தற்போது இந்த நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உணவு விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி சில்லறை விற்பனை கடைகள் அதாவது துணி விற்பனை செய்யும் கடைகள், நகை விற்பனை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் கடைகள், மொபைல் போன் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படலாம் என ஹைதராபாத் நகர காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் பார்கள் எவ்வளவு நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவிப்பையும் ஹைதராபாத் நகர காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இதன்படி ஹைதராபாத் பெருநகர கார்ப்பரேஷன் எல்லை மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம்.
பார்கள் மூலம் மதுபானங்கள் விற்கும் கடைகள் வார நாட்களில் நள்ளிரவு 12 மணி வரையும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையும் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தான் பெங்களூருவிலும் நள்ளிரவு 1 மணி வரை மது கடைகள் திறந்திருக்கலாம் என பெங்களூரு நகர நிர்வாகம் அறிவித்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications