மும்பை பங்குச்சந்தை இன்று காலை ஹூண்டாய் பங்குகளின் லிஸ்டிங் எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பாகத் துவங்கினாலும், சில மணிநேரத்தில் அதன் கோர முகத்தைக் காட்டத் துவங்கியது. ஹூண்டாய் பங்குகள் 1.5 சதவீத தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டது மட்டும் அல்லாமல் 5 சதவீதம் வரையில் சரிவைச் சந்தித்தது.
இதேவேளையில் பலவீனமான இந்திய நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை ஆகியவை இந்தியப் பங்குச்சந்தையை மோசமான வீழ்ச்சிக்குத் தள்ளியுள்ளது.

இதேவேளையில் அமெரிக்காவில் பத்திர சந்தை மீதான முதலீட்டில் வட்டி வருமானம் உயர்ந்து, அமெரிக்க டாலர் வலுவடைந்ததால் உலகளாவிய சந்தை போக்குகளும் இந்திய பங்குகளைப் பாதித்தன. ஏற்கனவே சீனாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக முதலீடுகள் வெளியேறி வரும் வேளையில், தற்போது அமெரிக்கச் சந்தையும் பெரும் பிரச்சனையாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் அதிகமான வீழ்ச்சியைக் கண்டன. BSE மிட் கேப் குறியீடு 2.52% மற்றும் ஸ்மால் கேப் குறியீடு 3.81% வீழ்ச்சியடைந்தது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் கோடி குறைந்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இன்று Nifty 50 குறியீட்டில் ஐசிஐசிஐ வங்கி (0.74% உயர்வு), நெஸ்ட்லே (0.10% உயர்வு) மற்றும் இன்போசிஸ் (0.04% உயர்வு) மட்டுமே உயர்வுடன் முடிந்தது.
ஆனால் துறை வாரியாக பார்க்கும் போது பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் மற்றும் உலோகப் பங்குகள் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டன. இதை தொடர்ந்து ஆட்டோ, மீடியா, நுகர்வோர் பொருட்கள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளும் கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்தன.


Click it and Unblock the Notifications