சென்னை: ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவில் சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உட்பட மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கிய இடத்தில் உள்ளார் கௌதம் அதானி.
சொத்து மதிப்பு பாதியாகக் குறைந்தாலும் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் கௌதம் அதானியின் அதானி குழுமத்திற்கு ஏதேனும் கடுமையான சேதம் ஏற்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி-யின் பொருளாதார கனவு திட்டத்தைத் தடம்புரளச் செய்யலாம் என சந்தை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளையில் பிரதமர் மோடி அலுவலக அதிகாரிகளுக்குக் கார்ப்பரேட் விவகார அமைச்சக அதானி குழுமம் குறித்த விளக்கம் அளித்துள்ளதாகவும், செபியுடன் தொடர்பில் இருந்த நிலையில், தற்போது 20000 கோடி ரூபாய் FPO திட்டத்தில் இருந்த ஆங்கர் முதலீட்டாளர்களான கிரேட் இன்டர்நேஷனல் டஸ்கர் ஃபண்ட் மற்றும் ஆயுஷ்மத் லிமிடெட் குறித்து செபி ஆய்வு செய்வதாக நேற்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
கௌதம் அதானி
கௌதம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பை எதிர்கொண்டு உள்ளது. ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் மோசடி மற்றும் சந்தைக் கையாளுதல் குறித்து ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதானி குழுமம் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
அதானி குழுமம் மற்றும் கௌதம் அதானி ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைகளில் இருக்கும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து வருகின்றனர். இதேவேளையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் பல கடன்களை முன்கூட்டியே செலுத்தும் பணிகளை துவங்கியுள்ளது அதானி குழுமம்.
சதானந்த் தூமே
இந்த நிலையில் தான் அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டியூட் அமைப்பின் மூத்த உறுப்பினரான சதானந்த் தூமே ப்ளூம்பெர்க் டிவி-க்கு அளித்த பேட்டியில் அதானி குழுமத்திற்கு ஏதேனும் கடுமையான சேதம் ஏற்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி-யின் பொருளாதார கனவு திட்டத்தில் பெரும் பகுதி பாதிக்கும் என கூறியுள்ளனர்.
கிரீன் எனர்ஜி துறை
கௌதம் அதானி இந்தியாவில் இன்பராஸ்டக்சர் துறையில் மட்டுமல்ல கிரீன் எனர்ஜி துறையிலும் முதலீடு செய்துள்ளார். இதனால் அதானி குழுமத்தின் வீழ்ச்சி நரேந்திர மோடி-யின் பொருளாதார கனவு திட்டத்தைப் பாதிக்கும் என சதானந்த் தூமே தெரிவித்துள்ளார்.
சதானந்த் தூமே : மோடி - அதானி
இதேவேளையில் சதானந்த் தூமே இன்று இந்தியாவில் எந்தொரு தொழிலதிபரும் கௌதம் அதானி விட பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக இருக்க முடியாது. இவர்களுக்கு மத்தியிலான நெருக்கம் சுமார் 20 வருடமாக உள்ளது என சதானந்த் தூமே ப்ளூம்பெர்க் டிவி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மோடி மறுப்பு
ஆனால் கௌதம் அதானி உடனான நெருக்கத்தை மோடி தொடர்ந்து மறுத்து வருகிறார், இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் முடிந்த அடுத்த நாளில் இருந்து அதானி குழும குறித்த கேள்விகளால் நாடாளுமன்ற கூட்டம் கடும் அமளியாகவே உள்ளது.
செபி விசாரணை
இந்த நிலையில் தான் அதானி குழுமம் ரத்து செய்த 20000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO திட்டத்தில் இருந்த ஆங்கர் முதலீட்டாளர்களான கிரேட் இன்டர்நேஷனல் டஸ்கர் ஃபண்ட் மற்றும் ஆயுஷ்மத் லிமிடெட் குறித்து செபி ஆய்வு செய்வதாக நேற்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.


Click it and Unblock the Notifications