டெல்லி: இந்தியாவில் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி தேர்வுகள், நீட் நுழைவு தேர்வு என படிப்பு , வேலை ஆகியவற்றுக்காக நடத்தப்படும் பொது தேர்வுகளில் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனையொட்டி நாட்டில் பல்வேறு பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அண்மை காலமாக இந்தியாவில் இது போன்ற பயிற்சி மையங்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்து விட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பயிற்சி மையங்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரியின் அளவு கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
மத்திய கல்வித் துறை அமைச்சகம் இது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி 2020-ஆம் நிதியாண்டில் இருந்து இந்தியாவில் பயிற்சி மையங்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரியின் அளவு படிப்படியாக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

2021-ஆம் நிதி ஆண்டில் பயிற்சி மையங்கள் ஜிஎஸ்டி வரியாக மட்டும் 2,215 கோடி ரூபாயை செலுத்தியுள்ளன, 2022 ஆம் நிதி ஆண்டில் இது 3,045 கோடி என அதிகரித்தது. 2023 ஆம் நிதி ஆண்டில் இது 4,667 கோடி ரூபாயாகவும் 2024-ஆம் நிதி ஆண்டில் 5,517 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தர் இந்த தரவுகளை வெளியிட்டுள்ளார்.
இதன்படி இந்தியாவில் பயிற்சி மையங்களில் இருந்து பெறப்படும் ஜிஎஸ்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் கோச்சிங் இன்ஸ்டிட்யூட் என்று அழைக்கப்படும் பயிற்சி மையங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறையாக இருக்கிறது என தெரிவித்துள்ள மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் மஜும்தர் விரைவில் இது இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், இந்த மையங்களுக்கு எந்த ஒரு நிறுவப்பட்ட கொள்கை அல்லது ஒழுங்கு முறையும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகப்படியான கட்டணங்கள், மாணவர்கள் மீதான தேவையற்ற மன அழுத்தம் போன்றவையும் பிரச்னை தான் என தெரிவித்துள்ளார்.
இந்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சகம் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பை ஜனவரி 16 2024 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி அதற்கான சட்ட ரீதியான கட்டமைப்பை உருவாக்க பரிந்துரை செய்தது என்று கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு டெல்லியின் பழைய இந்திராநகர் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு குடிமைப் பணி தேர்வுகளுக்காக படித்து வந்த மூன்று மாணவர்கள் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இதுபோன்ற பயிற்சி மையங்களை நெறிமுறை படுத்துவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications