தெற்காசிய நாடுகளில் தற்போது வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் மூலம் முதலீட்டாளர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது. இதற்கு அடையாளமாக, வரலாற்றில் முதல் முறையாக இந்தியப் பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு ஹாங்காங் பங்குச்சந்தையை முந்தியுள்ளது.
இதன் மூலம் உலகிலேயே அதிக மதிப்புடைய சந்தைகளில் 4வது இடத்தை எட்டியுள்ளது இந்தியா. திங்கட்கிழமை பங்குச்சந்தை விடுமுறையைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் வெளியான தகவல் இந்திய முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, திங்கள்கிழமை சர்வதேச சந்தையில் வர்த்தக முடிவில் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பு, 4.33 டிரில்லியன் டாலராக இருந்தது, ஆனால் ஹாங்காங் பங்குச்சந்தை 4.29 டிரில்லியன் டாலராக இருந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 72,039.20 புள்ளிகளை அடைந்தது. இதன் இந்திய பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 3,75,97,315.42 கோடி ரூபாயாக உள்ளது, அதாவது 4.51 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இது இந்தியாவை உலக அளவில் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக மாற்றியுள்ளது. இந்திய பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு டிசம்பர் 5 அன்று முதல் முறையாக $4 டிரில்லியனைத் தொட்டது, அடுத்த 45 நாட்களில் 4.5 டிரில்லியன் டாலரை தொட்டு உள்ளது.

இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 537.27 புள்ளிகள் உயர்ந்து 71,960.92 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் ஆகியவை உயர்வுடன் இருக்கும் வேளையில் எஸ்பிஐ, இண்டஸ்இந்த், மாருதி சுசூகி, ஹெச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை சரிவில் உள்ளது


Click it and Unblock the Notifications