மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த தங்கம் மீதான இறக்குமதி வரிக் குறைப்பு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கம் தனது உச்ச விலையில் இருந்து ஏற்பட்டு உள்ள சரிவு ஆகியவற்றின் எதிரொலியாகத் தங்கம் விலை அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக மார்ச் மாதம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு கடந்த வருடத்தை விடவும் சுமார் 471 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய மக்களுக்குத் தங்கம் மீது தீரா காதல் எப்போது குறையாது என்பதற்கு இதுவும் முக்கியமான சான்று.
அமெரிக்கப் பத்திர சந்தை
அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் சர்வதேச தங்கம் விலையில் அதிகளவிலான பாதிப்பை உருவாக்கியது இந்தியர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் இந்த மார்ச் மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 160 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
தங்கம் விலை சரிவு
தங்கம் விலை ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2,072 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் மாத நிலவரத்தின் படி சர்வதேச சந்தையில் தங்கம் விலை சுமார் 17 சதவீதம் குறைந்துள்ளது. இதைவிட ரீடைல் முதலீட்டாளர்களுக்கு என்ன வேண்டும்.
மார்ச் காலாண்டு நிலவரம்
கடந்த வருடம் இதே மார்ச் காலாண்டில் இந்தியாவில் 124 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த வருடம் 321 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மார்ச் மாதம் மட்டும் 160 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் பற்றாக்குறை
இந்தியாவில் தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கச்சா எண்ணெய், ஆயுத இறக்குமதி காரணமாக அதிகளவிலான வர்த்தகப் பற்றாக்குறை சந்தித்து வரும் நிலையில் தற்போது தங்கமும் சுமையாக மாறியுள்ளது.
இறக்குமதி வரிக் குறைப்பு
பிப்ரவரி மாதம் இந்தியாவில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 10.75 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்தியாவிற்குக் கடத்தப்பட்டு வரும் தங்கத்தின் அளவை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வரிக் குறைப்பை மத்திய அரசு அறிவித்தது.


Click it and Unblock the Notifications