டெல்லி: 6 பில்லியன் டாலர்கள் செலவில் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடல் பரிசோதனைக்கான நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என ஒப்பந்ததாரர் தரப்பில் புகார் எழுந்ததால் இந்த திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 50,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்காக ஜெர்மன் நாட்டை சேர்ந்த டைசன் குரூப் மரைன் சிஸ்டம் என்ற நிறுவனமும் மத்திய அரசுக்கு சொந்தமான மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்தன. இந்த இரு நிறுவனங்களும் ஆறு நீர்மூழ்கி கப்பல்களையும் கட்டமைப்பது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஒப்பந்தத்தை பெறுவதில் எல்&டி மற்றும் ஸ்பெயினை சேர்ந்த நவாண்டியா நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. இரு நிறுவனங்களும் ஒப்பந்த புள்ளி கோரி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. இந்த ஏலத்தை இறுதி செய்வதற்கான பணிகளில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. மேலும் இரண்டு நிறுவனங்களில் தொழில்நுட்பத் திறன்களை தற்போது பரிசோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் கடல் பரிசோதனையின் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என ஒப்பந்தம் கோரிய நிறுவனங்களில் ஒன்று புகார் தெரிவித்துள்ளதாக மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணி ஓராண்டுக்கு மேல் தாமதமாகும் என சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்கு கமிட்டி ஒன்றை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமைந்துள்ளதாகவும் அவர்கள் ஆய்வு செய்து இறுதி முடிவை கூறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது பயன்பாட்டில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்களில் 16 கப்பல்கள் ரஷ்யா மற்றும் ஜெர்மனியிடமிருந்து வாங்கப்பட்டவை. கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறுமுறை இவை புதுப்பிக்கப்பட்டு விட்டன .
தற்போது படையிலிருந்து அவற்றை நீக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. இந்த நிலையில் தான் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கி 2030-ம் ஆண்டு தொடக்கத்திலேயே அவற்றை படையில் சேர்த்து விட வேண்டும் என திட்டமிட்டது. ஆனால் தற்போது இதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒருபுறம் சீனா தன்னுடைய கடற்படையை வலிமைப்படுத்தி வரும் நிலையில் இந்தியா இந்த திட்டத்தில் பின்னடைவு சந்தித்திருப்பது பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது.
நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமானத்தில் இந்தியா வெற்றி அடைந்துவிட்டால் பல்வேறு நாடுகளுக்கும் கப்பல்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும் என மத்திய அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications