நூற்றாண்டுகள் பல கடந்தாலும், தங்கம் என்ற உலோகம் உலகம் முழுவதும் செல்வம் மற்றும் பாதுகாப்பின் குறியீடாகவே இருந்து வருகிறது. அதன் பளபளப்பான கவர்ச்சி, வேறு எந்த உலோகத்திற்கும் இல்லாத ஒரு மதிப்பை தங்கத்திற்கு வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்தியாவைப் போன்ற ஆசிய நாடுகளில், தங்கம் என்பது சமூக கலாச்சார வாழ்வின் ஒரு அங்கமாகவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய தங்கக் கையிருப்புகள், அதிகம் கவனம் பெறாத சில நாடுகளில் குவிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக தங்க இருப்பின் புள்ளி விவரங்கள் : உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இதுவரை உலகளவில் சுமார் 2,44,000 மெட்ரிக் டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 1,87,000 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 57,000 மெட்ரிக் டன் தங்கம் இன்னும் பூமிக்கு அடியில் புதைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதையலின் பெரும்பகுதி சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புதைந்து கிடக்கும் தங்க வளத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் பட்டியல் : இதுவரை வெட்டி எடுக்கப்படாத தங்க இருப்புக்களின் அடிப்படையில் பார்க்கும் போது, ஆஸ்திரேலியா உலகிலேயே முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணுக்கு அடியில் சுமார் 12,000 மெட்ரிக் டன் தங்கம் புதைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக 720 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (சுமார் ரூ.60 லட்சம் கோடி) அதிகமாகும்.
இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்நாட்டிலும் சுமார் 12,000 மெட்ரிக் டன் தங்கம் பூமிக்கு அடியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தோனேசியா, 3,600 மெட்ரிக் டன் தங்க இருப்பை தன்வசம் வைத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்கா, சுமார் 3,200 மெட்ரிக் டன் தங்கத்தை கொண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவில் சுமார் 3,000 மெட்ரிக் டன் தங்கம் பூமியில் புதைந்து கிடப்பதாக சொல்லப்படும் நிலையில், இந்த நாடு 5- வது இடத்தில் உள்ளது.
இந்த 5 நாடுகளும், புதைந்துள்ள தங்க வளத்தின் அடிப்படையில் உலகளாவிய தங்க இருப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலகத்தின் இந்த அரிய தங்கம் குறிப்பிட்ட பிராந்தியங்களில் எப்படி மகத்தான அளவில் குவிந்துள்ளது என்பதை இந்தத் தரவுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இது எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் இந்த நாடுகளின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வல்லமை கொண்டவை என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications