வீட்டில் உணவு சமைத்து உண்ணும் போக்கும் மெல்ல மெல்ல மறைந்து வெளியில் வாங்கி உணவு உண்ணும் போக்கு அதிகரிக்கும் என ஸெரோதா துணை நிறுவனர் நிகில் காமத் தெரிவித்துள்ளார் . அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்த தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் வீட்டில் சமைப்பதே கிடையாது , சில வீடுகளில் சமையலறை கூட கிடையாது இந்த விஷயத்தை கேட்டால் இந்தியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள் ஆனால் நான் சிங்கப்பூரில் பலரிடம் பேசினேன் அதிலிருந்து எனக்கு கிடைத்த தகவல் இது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்த போக்கு இன்னும் சில காலங்களில் வரும் என தெரிவித்த அவர் இந்தியாவில் உணவகங்களை திறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை இன்னுமும் நாம் வீட்டில் சமைத்த உணவுகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம், பிறந்த நாள், திருமண நாள், பார்ட்டி என வரும்போது மட்டுமே நாம் வெளியில் சென்று உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். தற்போது ஸ்விக்கி உள்ளிட்ட செயலிகளின் வருகையால் உணவினை ஆர்டர் செய்து நம் வீட்டிலேயே உண்ணும் பழக்கம் அதிகரித்திருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தனிநபர் வருமானம் உயர உயர மக்கள் வீட்டில் சமைக்காமல் வெளியில் உணவினை வாங்கி உண்ணும் போக்கு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். இந்தியர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 வேளை உணவினை மட்டுமே வெளியில் வாங்கி உண்கிறார்களாம். இது சர்வதேச அளவில் மிக குறைந்த விகிதம். சீனாவில் ஒரு நபர் ஒரு மாதத்திற்கு 33 முறை வெளியில் வாங்கிய உணவை உண்கிறார், அமெரிக்காவில் இது 27 ஆகவும் சிங்கப்பூரில் 19ஆகவும் இருக்கிறதாம்.
இந்தியாவில் வீட்டில் சமைத்த உணவை உண்ணும் கலாச்சாரம் தொடர்ந்து இருக்கிறது ஆனால் இந்த கலாச்சாரம் மாற்றம் அடைந்து வருகிறது என தெரிவித்துள்ள அவர் 2030 ஆம் ஆண்டில் இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு 7இல் இருந்து 8 நாட்கள் வெளியில் உண்ணும் உணவு உண்ணும் பழக்கத்திற்கு மாறுவார்கள் என கணித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் இந்தியாவில் உணவு சேவை சார்ந்த துறையின் மதிப்பு 4-5 லட்சம் கோடி, இது 10 லட்சம் கோடி மதிப்புள்ள துறையாக 2030ஆம் ஆண்டில் வளரும் என கூறியுள்ளார்.. அதே வேளையில் அமெரிக்காவில் மெக்டொனால்ட் போன்ற புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன அப்படி ஒரு புகழ்பெற்ற உணவகம் இந்தியாவில் கிடையாது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவுக்கே உரிய மற்றும் இந்தியர்களுக்கே உரிய பொருத்தமான உணவகத்தை தொடங்கினால் பின்னாளில் பெரிய வெற்றி காண முடியும் என கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications