இந்தியாவில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முதன் முதலாக துவங்கப்பட்ட காலத்தில் உருவான ஒரு நிறுவனம் இன்றும் இயங்கி வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது மட்டும் அல்லாமல் இந்த நிறுவனம் தற்போது 50வது ஆண்டுவிழாவை அடுத்த சில நாட்களில் கொண்டாட உள்ளது என்பது கூடுதலான சிறப்பம்சம்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1973 டிசம்பர் 29 ஆம் தேதியன்று உருவான Processor Systems (India) Pvt Ltd தான் இந்தியாவின் கம்பியூட்டர் யுகத்தில் உருவான முதல் நிறுவனங்களில் ஒன்று. PSI நிறுவனம் தனது அலுவலகத்தை கேரளாவில் பதிவு செய்திருந்தாலும், பெங்களூரில் தனது அலுவலகத்தை தொடங்கியது.

பெங்களூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சிலிக்கன் வேலி ஆஃப் இந்தியா கம்பியூட்டர், சாப்ட்வேர் அடித்தளத்தை 1970களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக PSI நிறுவனம் துவங்கியதில் இருந்து கட்டமைத்தது.
பெங்களூரின் ரிச்மாண்டு சாலையில் உள்ள ஒரு பெஸ்மெண்டில் புரோஸசர் சிஸ்டம்ஸ் இந்திய பிரைவேட் லிமிடெட் முதன் முதலில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பிஎஸ்ஐ என அழைக்பபட்ட இந்நிறுவனம், தற்போது ProcSys என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.
பிஎஸ்ஐ-யின் சரித்திரம் அதன் மூன்று நிறுவன இயக்குநர்களின் கனவில் பிறந்தது. மறைந்த விகே ரவீந்திரன் - இவர் அமெரிக்காவின் Bell Labs நிறுவனம் தந்த வேலைவாய்ப்பை உதறிவிட்டு ஒரு ஐடி நிறுவனத்தைத் தொடங்குவதற்காக இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். அப்போது இந்தியப் பொறியாளர்களுக்கு ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாக இருந்தது.
ஐடி ஊழியர்களே..! இந்திய ஐடி துறையின் தந்தை யார் தெரியுமா..?
அவரது சகோதரர் மறைந்த விகே ஹரிந்திரன் கேரளத்தில் இருந்த Toshiba Anand நிறுவனத்தில் செய்து வந்த தனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ரவீந்திரனுடன் இணைந்து கொண்டார்.
மூன்றாவதாக வினய் தேஷ்பா்டே ரவீந்திரனைப் போலவே ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி ஆவார். அவரும் பிஎஸ்ஐ நிறுவனத்தில் வந்து பார்ட்னரானார்.
இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களிலும் தங்களுடைய மைக்ரோபிராஸசர்கள் கொண்ட ஒரு கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்பது தான் அந்த மூவரின் நோக்கமாகும். இந்தியாவில் இருந்து IBM நிறுவனம் வெளியேறிய காலகட்டம் என்பதாலும் இந்தியாவில் ஐடி கம்பெனிகளைத் தொடங்குவதற்கு இருந்த கடுமையான விதிகளாலும் பிஎஸ்ஐக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
தொலைநோக்க சிந்தனை கொண்ட ரவீந்திரன் இதை தங்களுக்கு நல்லதொரு தருணமாக கருதினார். தன்னை ஒரு பிராஸசர் என்றும் அனைத்து பிரச்னைகளுக்குமான ஒரு விடை என்று எப்போதும் ரவி கூறுவார். இதனால் நிறுவனத்தின் பெயரை பிராஸஸர் சிஸ்டம்ஸ் இந்தியா என்று பெயரிட்டதாக மறைந்த ஹரிந்திரனின் மனைவியுமான நந்தனா இஸ்பிலியா தெரிவித்தார்.
இதுபற்றி நந்தனா இஸ்பிலியா கூறுகையில், 1970களில் ஜனதா அரசானது, கோகோ கோலா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது. இதைத் தொடர்ந்து ஐபிஎம்மும் வெளியேறியது.
இந்த நிலையில் 50கள் மற்றும் 60களின் மாடல் கம்ப்யூட்டர்கள் மட்டுமே இந்தியர்களின் பயன்பாட்டில் இருந்தன. அதேவேளையில் மேலைநாடுகளில் மைக்ரோபிராஸசர் புரட்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவுடன் கம்ப்யூட்டர் தொடர்பான எந்தவொரு தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்திருந்ததால் அமெரிக்க தொழில்நுட்பத்தை இந்தியாவால் பெற முடியவில்லை.
இதனால் பிஎஸ்ஐ-யின் எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த ஒரு டெக்னிக்கல் டீம் சொந்தமாக PDP 11 DEC என்ற இயந்திரங்களை தயாரிக்கத் தொடங்கியது. இவற்றின் மூலம் பிட்-ஸ்லைஸ் ஆர்க்கிடெக்சர் மூலம் பிடிபி அமைப்பை உருவாக்கி கம்ப்யூட்டர்களை செயல்பட வைத்தனர்.
இந்நிலையில் பிஎஸ்ஐ PSI OMNI என்ற மினி கம்ப்யூட்டரை உருவாக்கியது. இது கமர்ஷியல் நோக்கத்துக்காக அல்லாமல் முழுக்க முழுக்க ராணுவ பயன்பாட்டுக்காகத் தயாரிக்கட்டன. பின்னர் FORTRAN 4 சாப்ட்வேரைப் பயன்படுத்தி கல்வி கற்றலுக்கான மற்றும் வியாபாரத்துக்கான கம்ப்யூட்டர்களை தயாரிக்கத் தொடங்கியது என்றார்.
பிஎஸ்ஐ ஒரு சிறிய நிறுவனமாக இருந்தபோதும் இந்தத் துறையில் புத்திசாலியான ஊழியர்களை கவரத் தொடங்கியது. அப்போது பெரிய அளவில் நிதியில்லாத நிலையில் தொடக்கத்தில் பல சிரமங்களை புரோசிஸ் சந்தித்தது.
இதற்குக் காரணம் வங்கிகளுக்கு கம்ப்யூட்டர் துறையின் பயன்பாடு பற்றிய சிந்தனைத் தெளிவு இல்லை. ஏதொவொரு மரடப்பாவில் அடைத்த சில இயந்திரங்களை வைத்துக் கொண்டு சில பொறியாளர்கள் திரிகின்றனர் என்று நினைத்து விட்டன.
இன்றைக்கு ProcSys நிறுவனம் பல துறைக்குத் தேவையான அனைத்து எம்மெட்டெட் ப்ராடெக் மற்றும் இன்ஜினியரிங் சேவைகளை அளித்து வருகிறது. அத்தகைய பிஎஸ்ஐ நிறுவனம் இந்தாண்டு தனது 50ஆவது வயதை எட்டியுள்ளது நம் நாட்டுக்கே பெருமைக்குரிய விஷயமாகும்.


Click it and Unblock the Notifications