ஈரான் போர் இந்தியாவுக்கு பல தலைவலிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஒரு புறம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என மக்கள் திண்டாடுகின்றனர். இதற்கிடையே தங்கம் மீதான இறக்குமதி வரியை அரசு திடீரென உயர்த்தியது.
இந்தியா தனக்கு தேவையான தங்கம், வெள்ளி ,கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இவற்றை அமெரிக்க டாலர் கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் கைவசம் இருக்கக்கூடிய அமெரிக்க டாலரை அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பயன்படுத்த வேண்டும், எனவே பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொண்டால் தங்கம் இறக்குமதி குறையும் அந்த டாலரைக் கொண்டு நாம் இன்னும் கச்சா எண்ணெய் வாங்கி பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு பயன்படுத்த முடியும் என பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீரென உயர்த்தப்பட்டது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக இருந்து ஒரே நாளில் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தங்கம் , வெள்ளி இறக்குமதி வரி உயர்ந்ததால் நகை விற்பனையாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளை உயர்த்தினார்கள். இதனால் பொதுமக்கள் இடையே தங்கம், வெள்ளி வாங்கும் போக்கு குறையும் ,எனவே தங்கம் இறக்குமதி வரி குறைந்து கையில் இருக்க கூடிய அமெரிக்க டாலர் தங்கம் வாங்குவதற்கு செல்லாமல் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு செல்லும் என்பதற்காக தான் அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தது.
ஆனால் இறக்குமதி வரி உயர்வு மத்திய அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி தந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை குறிப்பிடுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசு 15 சதவீதமாக உயர்த்தி இருப்பதால் கள்ளச்சந்தை வழியாக தங்கம் இந்தியாவிற்கு வருவது தான் அதிகரிக்கும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதாவது 2013ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரி 10% உயர்த்தப்பட்டது அந்த சமயத்தில் வழக்கத்தை விட ஏழு மடங்கு அதிகமாக கள்ளச் சந்தை மூலமும் பிளாக் சேனல் மூலமும் தங்கம் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டது, இதுவே மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதமாக குறைத்த போது கள்ள சந்தை வழியாக தங்கம் இந்தியாவிற்குள் நுழைவது ஜீரோ என்ற நிலையை எட்டியது என்கிறது.
அரசு இறக்குமதி வரி உயர்வால் தங்கம் இறக்குமதி குறையும் என கருதினாலும் தவறான வழிகளில் இந்தியாவிற்குள் தங்கம் வருவது என்பது அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட தங்க கடத்தல் மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பினை இந்த வரி உயர்வு ஏற்படுத்தி தரும் என உலக தங்க கவுன்சிலின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்த வரி உயர்வு நடவடிக்கையால் இந்தியாவில் தங்கத்தின் தேவை என்பது 50 லிருந்து 60 டன்கள் குறையும் இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் குறைவாக தான் இருக்கும் என கூறுகிறது.
வரி உயர்வால் நகை வாங்கும் போக்கு குறையாது ஏனெனில் இந்தியாவில் கலாச்சார ரீதியாக தங்கள் வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக தங்க நகை இருப்பதால் அந்த தேவை குறையாது என்கிறது. குறுகிய காலத்தில் இந்த வரி உயர்வு ஒரு சிறந்த நடவடிக்கையாக தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் கள்ள சந்தை வழியாகவும் தவறான வழிகளிலும் இந்தியாவிற்கு தங்கம் நுழைவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கிறது.
இதனால் இந்திய சந்தையில் போலி தங்கம் மற்றும் தரம் குறைவான தங்கம் அதிக புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கும் நிபுணர்கள் மக்கள் தங்க நகை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் ஹால்மார்க் குறியீட்டை சரிபார்க்க வேண்டும் சரியான ரசீதை பெற வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications

