மத்திய அரசு தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகளின் இறக்குமதிக்கு திடீரென கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சில வியாபாரிகள் நூதன முறையில் செய்த மோசடிகள் அம்பலமானதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகளை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இந்த கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவுக்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கும் இடையே இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சில வியாபாரிகள் தவறாக பயன்படுத்தி தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

சுங்க தீர்வை பிரிவு 7113இன் (CTH (customs tariff heading) 7113) கீழ் உள்ள பொருட்களுக்கான இறக்குமதி கொள்கை "தடையற்றது" என்பதிலிருந்து "கட்டுப்படுத்தப்பட்டது" என மாற்றப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் உள்ள பொருட்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் அடங்கும். எனவே இந்த பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குநரகத்தின் அனுமதி மற்றும் உரிமம் பெறுவது கட்டாயமாகப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது அனைத்து தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகளின் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள நிறுவனங்களின் இறக்குமதிகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நவரத்தினங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்களின் கீழ் செய்யப்படும் இறக்குமதிகளுக்கும் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.
இந்தியா asean கூட்டமைப்பில் உள்ள நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை கற்கள் பதிக்கப்பட்டவை என குறிப்பிட்டு எந்த சுங்க வரியும் இல்லாமல் இறக்குமதி செய்து லாபம் பார்த்துள்ளனர். இதனை கண்டறிந்த மத்திய அரசு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க இந்த கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு வெளிநாட்டு வியாபாரிகளுடன் நகை இறக்குமதிக்காக இந்திய வியாபாரிகள் எந்த ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தாலும் அவை ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே நேர்மையாக தொழில் புரியக்கூடிய நிறுவனங்கள் பாதிக்கப்படாத வகையில் உரிமம் வழங்கும் முறையை எளிதாக்க வேண்டும் என நகை இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான asean கூட்டமைப்புடன் 2010 ஆம் ஆண்டிலிருந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டிருக்கிறது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால் தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி வரி இல்லாமலும் மிக குறைந்த வரியிலும் பல்வேறு பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனை வியாபாரிகள் தவறாக பயன்படுத்தி தங்கம், வெள்ளி நகைகளை இறக்குமதி செய்து லாபம் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications