இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்து (Write-Off) உள்ளது. இந்த 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் வெறும் 13 சதவீத தொகையை மட்டுமே வசூலித்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 17,123 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற நிலையில் நடப்பு நிதியாண்டில் சுமார் 50 சதவீத வளர்ச்சியில் 25,685 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் லாப அளவீட்டில் பதிவு செய்யப்பட்ட சாதனை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த டிவீட்டில், வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை (என்பிஏ) குறைப்பதற்கும், வங்கிகளின் மேம்படுத்தும் அரசின் தொடர் முயற்சிகளே பொதுத்துறை வங்கிகளின் லாபம் உயர்வுக்குக் காரணம் என்று கூறியிருந்தார்.
இந்திய வங்கிகள்
இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் வாராக் கடன் அல்லது செயல்படாத சொத்துக்கள் பிரிவில் இருக்கும் 10,09,510 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை ஒத்திவைத்து (Write-Off) உள்ளது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.
நிதியியல் பற்றாக்குறை
2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதியியல் பற்றாக்குறை அளவு 16.61 லட்சம் கோடி ரூபாய், இந்த 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன் தொகையை முழுமையாக வசூலித்து இருந்தால் சுமார் 61 சதவீத நிதி பற்றாக்குறையைத் தீர்த்திருக்க முடியும்.
வாராக் கடன்
இதேவேளையில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு 2017-18ல் 11.2 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் 2022 உடன் முடிந்த நிதியாண்டில் 5.9 சதவீதமாகக் குறைந்து 7,29,388 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த 5 வருடத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனில் வெறும் 1,31,036 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு உள்ளது.
கடன் ஒத்திவைப்பு (Write-Off)
வங்கிகள் ஒரு கடனை வசூலிக்க முடியாமல் வாராக் கடனாக அறிவித்தால் சில காலம் அக்கடனை வசூலிக்க முயற்சிகளை மேற்கொள்ளும், முயற்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் இக்கடனை ஒத்திவைத்து (Write-Off) விடும். ஒரு கடன் ஒத்திவைக்கும் பட்சத்தில் இந்தக் குறிப்பிட்ட கடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் இருந்து வெளியேறும்.
வரிச் சேமிப்பு
அப்படி வெளியேறும் பட்சத்தில் வங்கியின் வாராக் கடன் அளவு குறைவது மட்டும் அல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட கடனுக்கான வரியும் சேமிக்க முடியும். கடனை ஒத்திவைக்கப்பட்ட பின்பு வரியை வங்கியின் லாபத்தில் வரிக்கு முன்பே கழிக்க முடியும். இதனால் வங்கிகளின் நிதி நிலை மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
வங்கி புத்தகம்
பொதுவாக ஒரு கடனை வசூலிக்க முடியாது என்பதால் தான் கடனை வங்கி புத்தகத்தில் இருந்து நீக்க முடிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் இக்கடனை மொத்தமாகக் கைவிடாமல் அக்கடனை வசூலிக்கச் சிறப்புக் குழு அமைத்து தொடர்ந்து வசூல் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். ஒரு கடனுக்கு 3 மாதம் தவணை செலுத்தாத பட்சத்தில் அது வாராக் கடனாக மாற உள்ளது.


Click it and Unblock the Notifications