பிரபல மல்டி பிராண்ட் காலணி நிறுவனமான மெட்ரோ பிராண்டஸ் நிறுவனத்தின் தலைவர் ரபீக் மாலிக். இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரான இவருடைய சொத்து மதிப்பு ரூ.25,810 கோடியாகும். இவருக்கு மொத்தம் 5 பெண் வாரிசுகள்.
அவர்களில் ஒருவர்தான் அலிஷா மாலிக். ரூ.34,653 கோடி மதிப்பிலான மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு, இ காமர்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றின் தலைவராக நிறுவனத்தை புதிய உயரத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

படிப்பில் கெட்டிக்காரரான அலிஷா மாலிக், யு.கே.வில் நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் நிதியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 2009ல் தந்தையின் வர்த்தகத்தில் இணைந்தார். மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.
இவரது புதிய யோசனைகள் மற்றும் உத்திகளை செயல்படுத்தியதில் மெட்ரோ பிராண்ட்ஸ் சிறப்பான வளர்ச்சி காண தொடங்கியது. மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கான புதிய யோசனைகள் மற்றும் உத்திகளை அறிமுகப்படுத்துவதில் அலிஷா ஒரு முக்கிய வடிவமைப்பாளராக இருந்து வருகிறார்.
புதிய வணிக முயற்சிகளை முன்னெடுப்பதில் நிறுவனத்தில் அலிஷா செல்வாக்கு பெற்றவர். ஆன்லைன் வர்த்தகம், omnichannel மற்றும் புதிய கால சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை கட்டமைக்க ஒரு சிறந்த வணிக வளர்ச்சி உத்தியை அமைத்தார்.
இவரின் தலைமை மற்றும் மேற்பார்வையின் கீழ், மெட்ரோ, மோச்சி மற்றும் வாக்வே ஆகிய ஆன்லைன் வர்த்தக தளங்களை மெட்ரோ பிராண்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை புரிந்து அலிஷா மாலிக் வர்த்தகத்தை திறம்பட மேற்கொள்கிறார்.
அலிஷா மாலிக்கின் தாத்தா மாலிக் தேஜானி 1955ல் மும்பையில் ஒரு சாதாரண சப்பல் கடையாக மெட்ரோ பிராண்ட்ஸை தொடங்கினார். தாத்தா முதல் பேத்திகள் வரையிலான ஒரு குடும்பத்தின் கடுமையான உழைப்பு காரணமாக தற்போது (2023 செப்டம்பர் 30 நிலவரப்படி) மெட்ரோ பிராண்ட்ஸ் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 189 நகரங்களில் 795 ஸ்டோர்களை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications