இந்தியாவில் பொதுவாகத் தீபாவளி பண்டிகை காலத்தில் தன்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கம் அதிகளவில் விற்பனை நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் நகை விற்பனை சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெள்ளி விற்பனை தங்கத்தை விஞ்சியுள்ளது. அதிகரித்திருக்கும் தங்க விலை மற்றும் அதிகரித்து வரும் தொழில்துறை தேவை உள்ளிட்ட பல காரணங்களால் வெள்ளியின் விற்பனை இந்த தீபாவளி காலத்தில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டை விட வெள்ளி விலை சுமார் 40% அதிகரித்த நிலையிலும், வெள்ளி விற்பனை இந்த தீபாவளி சீசனில் 30-35% அதிகரித்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனத் துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளதால் வெள்ளி முக்கியமான முதலீடாகவும் மாறியுள்ளது.
இதற்கு மாறாக, தங்க விற்பனை கடந்த ஆண்டை விட 15% குறைந்து சுமார் 35-36 டன் அளவுக்கு குறைந்துள்ளது. வெள்ளி விலை ஒரு வருடத்தில் 40 சதவீதம் அதிகரித்த நிலையில், தங்கம் 30% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனாலும் விற்பனையில் சுமார் 15 சதவீதம் இந்த தீபாவளி காலத்தில் குறைந்துள்ளது.
இந்த தீபாவளி சீசனில் தங்கத்தின் மொத்த விற்பனையின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 28,000 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 24,000 - 25,000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகள், அமெரிக்க தேர்தல், மத்திய வங்கிகளின் வட்டி விகித மாற்றத்தின் எதிர்பார்ப்புகள், சோலார் எனர்ஜி துறையில் அதிகரித்திருக்கும் தேவை ஆகியவற்றால் நியூயார்க் மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்சில் (NYMEX) தங்க விலை $2,800 அளவைத் தாண்டியதால், 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்க தேவை நான்கு ஆண்டு சரிவை எட்டும் என்று கணித்துள்ளது.
இப்படி பல்வேறு காரணங்களால் இந்திய மக்கள் தங்க நகை வாங்கும் பழக்கத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளதால், நகை சந்தையும் பெரிய அளவில் மாறியுள்ளது. மக்கள் தங்கம் வாங்குவதைக் காட்டிலும் வெள்ளியை அதிகமாக வாங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த மாற்றம் சந்தையின் போக்கைப் பெரிய அளவில் மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications