2023-24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் லாபம் 3.1 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்திய நிறுவனங்களின் லாபம் 31 சதவிகிதம் அதிகரித்திருந்த நிலையில், இந்த பெரும் சரிவு மாத சம்பளக்காரர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரையில் அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு (2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில்) இது மிக மோசமான முதல் காலாண்டு முடிவாகும்.
ஜூலை மாதம் துவங்கியதில் இருந்து இந்திய நிறுவனங்கள் தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வந்தது. இந்த காலாண்டு முடிவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த போது பல முக்கியமான விஷயம் வெளியாகியுள்ளது. சுமார் 2,539 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை மொத்தமாக கணக்கிடும் போது மொத்த விற்பனை ரூ.22.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.21.7 லட்சம் கோடியாக இருந்தது.

இதேபோல மொத்த செலவு 6.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.19.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.18.5 லட்சம் கோடியாக இருந்தது. மேலும் 2,539 நிறுவனங்கள் ரூ.1.9 லட்சம் கோடி நிகர லாபம் அறிவித்துள்ளன. இது கடந்த ஆண்டு ரூ.1.97 லட்சம் கோடியிலிருந்து 3.1 சதவிகிதம் குறைந்துள்ளது என்று வங்கி ஆப் பாரோதாவின் பொருளாதாரத் துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் ஈடுப்படுத்தப்பட்ட 2,539 நிறுவனங்கள் சுமார் 33 துறைகளை சேர்ந்தது. இதிவ் 18 துறைகள் 7.7 சதவிகித சராசரியை விட அதிக விற்பனை வளர்ச்சியைக் கண்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 22 தொழில்துறைகள் கடந்த ஆண்டை விட வருவாயில் முன்னேற்றம் கண்டுள்ளன.
குறிப்பாக நுகர்வோர் பொருட்கள், மின்சாதனங்கள் மற்றும் ரீடைல் விற்பனை துறைகள் பருவகால தேவை காரணமாக வலுவான விற்பனையைப் பதிவு செய்தன. நிகர லாப அளவீட்டை பார்க்கும் போது சுமார் 20 துறைகள் 3.5 சதவீதம் என்ற சராசரி வளர்ச்சியை விட அதிகமாக இருந்தன. ஆனால் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 15 துறைகள் மட்டுமே கடந்த ஆண்டின் லாப வளர்ச்சியை விஞ்சின. மேலும் பிஎஃப்எஸ்ஐ பிரிவின் நிறுவனங்களின் செயல்திறன் இந்த ஆய்வில் இடம்பெறவில்லை.
மோதிலால் ஒஸ்வால் நிறுவனம் கூறுகையில், தேசிய பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங்களின் வரிக்கு பிந்தைய லாபம் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் மொத்த செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் விற்பனை நிறுவனங்களைத் தவிர்த்து கணக்கிடடால் நிஃப்டி 50 நிறுவனங்களின் வருவாய் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நிலையான வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த உற்பத்தி செலவுகள் இருந்தபோதிலும், இந்திய நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறைந்துள்ளது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலைக்கு மோசமான காரணம் பலவீனமான செயல்திறன், சந்தையில் குறைவான டிமாண்ட் ஆகியவை அடிப்படை கராணமாக உள்ளது என்று பேங்க் ஆப் பாரோடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications