டெல்லி: இந்த ஆண்டு குளிர்கால சீசனில் இந்திய விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 23,732 உள்நாட்டு விமானங்களை இயக்க உள்ளன.
நம் நாட்டில் நாளுக்கு நாள் விமான போக்குவரத்து சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவாக செல்லலாம் மற்றும் காலம் மிச்சமாகும் என்ற காரணத்தினால் மக்கள் பணத்தை பற்றி கவலைப்படாமல் விமானங்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விமான போக்குவரத்து துறையில், குளிர்காலம் என்பது, அக்டோபர் கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மார்ச் கடைசி சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்த குளிர்காலத்தில் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்கள் அதிகமாக இருக்கும். எனவே இந்த காலத்தில் மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் விமானங்களுக்கான தேவை அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு விமான சேவை நிறுவனங்களும் அதிகளவில் விமானங்களை இயக்கும்
விரைவில் தொடங்கவுள்ள குளிர்காலத்தில் இந்திய விமான நிறுவனங்கள் உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு குளிர்காலத்தில் இந்திய விமான சேவை நிறுவனங்கள் வாரத்திற்கு 23,732 உள்நாட்டு விமானங்களை இயக்க உள்ளன. இது சென்ற ஆண்டின் குளிர்காலத்தை காட்டிலும் 8.16 சதவீதம் அதிகமாகும்.
இந்திய விமான சந்தையில் புதிதாக களமிறங்கிய ஆகாசா ஏர், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இந்திய விமான சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு குளிர்காலத்தில் அதிகளவில் விமானங்களை இயக்க ரெடியாக உள்ளன. மேலும், விமான நிறுவனங்கள் 118 விமான நிலையங்களில் இருந்து விமானங்களை இயக்கும்.
இண்டிகோ: நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனம் இந்த ஆண்டு குளிர்காலத்தில் உள்நாட்டில் வாரத்துக்கு 13,119 விமானங்களை இயக்க உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 30.1 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு குளிர்காலத்தில் வாரம் 10,085 விமானங்களை இண்டிகோ இயக்கி இருந்தது.
ஆகாசா ஏர்: ஆகாசா ஏர் நிறுவனம் அண்மையில் 43 விமானிகள் நிறுவனத்தில் இருந்து வெளியேறியதால் விமானங்களை குறைத்தது. இருப்பினும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டின் குளிர்காலத்தில் உள்நாட்டில் வாரத்துக்கு கூடுதலாக 64.9 சதவீதம் விமானங்களை இயக்க உள்ளது. கடந்த குளிர்காலத்தில் ஆகாசா ஏர் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் 479 விமானங்களை இயக்கி இருந்தது. இந்த ஆண்டு 790 விமானங்களை இயக்க உள்ளது.
ஏர் இந்தியா: டாடா குழுமம் வசம் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு குளிர்காலத்தில் உள்நாட்டில் வாரத்துக்கு 2,367 விமானங்களை இயக்க உள்ளது. சென்ற குளிர்காலத்தில் 1,990 விமானங்களை உள்நாட்டில் இயக்கி இருந்தது. ஆக இந்த குளிர்காலத்தில் ஏர் இந்தியா உள்நாட்டு விமான சேவையை 18.9 சதவீதம் அதிகரிக்க உள்ளது.
ஸ்பைஸ்ஜெட்: முன்னணி விமான சேவை நிறுவனங்கள் குளிர்காலத்தில் விமான சேவைகளை அதிகரிக்கும் அதேவேளையில், ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் ஏர்ஆசியா இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை குறைத்துள்ளன. கடந்த சில காலாண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த குளிர்காலத்தில் வாரத்துக்கு 3,193 விமானங்களை இயக்கி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு குளிர்காலத்தில் வாரத்துக்கு 2,132 விமானங்களை மட்டுமே இயக்க திட்டமிட்டுள்ளது.
ஏர்ஆசியா இந்தியா: ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனம் இந்த குளிர்காலத்தில் வாரத்துக்கு 1,457 விமானங்களை மட்டுமே இயக்க உள்ளது. இது சென்ற குளிர்காலத்தை காட்டிலும் 0.3 சதவீதம் குறைவாகும். குளிர்காலத்தில் ஏர்ஆசியா இந்தியா நிறுவனம் வாரத்துக்கு 1,462 விமானங்களை இயக்கி இருந்தது. விஸ்தாரா நிறுவனம் வாரத்துக்கு 1,902 விமானங்களை இயக்க உள்ளது. இது சென்ற குளிர்காலத்தை காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும். 2022 குளிர்காலத்தில் விஸ்தாரா நிறுவனம் வாரந்தோறும் 1,941 விமானங்களை இயக்கி இருந்தது.


Click it and Unblock the Notifications