மே 13-ஆம் தேதி அன்று மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து உத்தரவிட்டது. ஏற்கனவே இருந்த 6 சதவீத வரி, தற்போது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு பிரதமர் நரேந்திர மோடி தங்க இறக்குமதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று மக்களுக்கு பரிந்துரை வழங்கியுள்ளார். இந்நிலையில் இறக்குமதி வரி ஏறியதையும் பொருட்படுத்தாமல் சில நகைக்கடைக்காரர்கள் 1 கிராம் தங்கத்திற்கு 450 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர்.
பொதுவாக இறக்குமதி வரி அதிகரித்தால் அதை நகை கடைக்காரர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் மேல் தான் வைப்பார்கள். இறக்குமதி வரி என்பது ஒவ்வொரு நகைக்கடைக்காரரும் வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி. இந்த வரியானது இதற்கு முன்னர் 6 சதவீதமாக இருந்தது. அதாவது ஒரு நகைக்கடைக்காரர் ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கினால், அவர் ரூ. 6,000 வரி செலுத்த வேண்டும்.
ஆனால் இப்போது இந்த வரித் தொகை 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கினால் 15,000 ரூபாய் வரை வரி செலுத்தியாக வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் நகை கடைக்காரர் என்ன செய்வார்? தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் தங்கத்திற்கான விலை, ஆபரணமாக வாங்கும் பட்சத்தில் மேக்கிங் சார்ஜ், ஜிஎஸ்டி, வரி தொகையை ஈடு செய்யும் தொகை மற்றும் அவருக்கான லாபம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து தான் விற்பனை செய்வார். இருந்தாலும் சில நகைக்கடைக்காரர்கள் 450 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர்.

தள்ளுபடி குறித்து சில விஷயங்களை வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் ரிசர்ச் ஹெட் கவிதா பகிர்ந்துள்ளார். அவருடைய கூற்றுப்படி இறக்குமதி வரி 6 சதவீதமாக இருந்த போதே சில வியாபாரிகள் மொத்தமாக தங்கத்தை இறக்குமதி செய்து வைத்துள்ளனர். இந்த ஸ்டாக்கை லாபத்தோடு விற்று தீர்க்கவே இந்த தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க மக்களும் தங்கம் வாங்குவதைக் கணிசமாக குறைத்து வருகின்றனர். இதனால் நகை கடைகளில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது .இதன் பொருட்டு மக்களை ஈர்க்கவும் சில நகைக்கடைக்காரர்கள் மேக்கிங் சார்ஜ் கூட இல்லாமல் விற்பனை செய்து வருகிறார்கள் என்று NAC ஜுவல்லர்ஸ்-இன் மேனேஜிங் டைரக்டர் ஆனந்த பத்மநாபன் கூறியுள்ளார்.
வரி உயர்வின் காரணமாக மக்கள் மட்டுமின்றி சிறிய நகைக்கடைக்காரர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஏனெனில் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் நகைக்கடை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு அந்த அளவு லாபமும் கிடைக்கவில்லை. கூட்டமும் குறைந்துள்ளது. இந்த விற்பனை சரிவை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் தவிர்த்து வருகின்றனர். சில நடுத்தர நகைக்கடைகள் புதிதாக நகை விற்பனை செய்வதற்கு பதிலாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்க தொடங்கியுள்ளன. ஆனால் இப்படி ஒவ்வொரு நகைகளையும் தங்களுக்கு ஏற்றார் போல் சில நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் எப்பொழுதெல்லாம் இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தங்கக் கடத்தலும் அதிகரிக்கும் என்று வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் எச்சரித்துள்ளது. அதோடு ஒவ்வொரு வருடமும் இறக்குமதி செய்யப்படும் 50 முதல் 60 டன் தங்கம் இந்த ஆண்டில் 10 சதவீதம் வரை குறையும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications