இந்தியர்கள் பாரம்பரியாக வங்கி டெபாசிட், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்து வந்தனர். ஆனால் தற்போது பங்குகளிலும் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள் தற்போது கடுமையான சரிவில் உள்ளன. அதேசமயம் கடந்த ஆண்டு முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது தினம் தினம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் இந்திய குடும்பங்கள் தங்கள் முதலீட்டை பங்குச் சந்தைகளின் பக்கம் திருப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பங்குகளை காட்டிலும் தங்கத்துக்கே இந்திய குடும்பங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று தரகு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தரகு நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் கூறுகையில், பங்குகள் ஒரு சொத்து வகையாக உயர்வு கண்டுள்ளபோதிலும், இந்திய குடும்பங்கள் மதிப்பை அதிகரிக்கும் ஒரு சொத்தாகவே தங்கத்தை தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு அதிகம். கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்திய சந்தையில் தங்கம் கொள்முதல் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 2014-15ம் நிதியாண்டு முதல் நடப்பு 2024-25ம் நிதியாண்டின் முதல் எட்டு மாதங்கள் வரையிலான காலத்தில் இந்திய குடும்பங்கள் 30,000 கோடி டாலருக்கு தங்கத்தை வாங்கியுள்ளன. 2015 காலண்டர் முதல் 2025 காலண்டர் ஆண்டின் முதல் 2 மாதங்கள் வரையிலான காலத்தில் இந்திய குடும்பங்கள் பங்கு சந்தையில் 19,400 கோடி டாலர் அளவுக்கே முதலீடு செய்துள்ளன என தெரிவித்துள்ளது.

ஆனந்த் ரதி ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் கமாட்டிஸ் மற்றும் கரன்சி பிரிவின் இயக்குனர் நவீன் மாத்தூர் கூறுகையில், தங்கம் சாதனை அளவை (புதிய உயர்வை) எட்டுவதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. சந்தை மேல்நோக்கிய நகர்வுக்கான (விலை உயர்வுக்கு) புதியதூண்டுதல்களுக்கு (அதாவது புதிய செய்திகள்) காத்திருக்கிறது . 1 முதல் 2 மாத சூழ்நிலையில், எம்சிஎக்ஸில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.87,900 முதல் ரூ.88,500 வரை செல்லும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது சர்வதேச சந்தைகளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,040 முதல் 3,050 டாலர் வரையிலான நிலைகளுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
பணவீக்க அச்சங்கள் நீடிப்பு, புவிசார் அரசியல் அபாயங்கள் அதிகரித்து வருவதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நடுத்தர கால அளவில் மேலும் உயருவதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. அமெரிக்காவின் ஜிடிபி புள்ளிவிவரம், வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் கோர் பிசிஇ விலை குறியீடு போன்றவை முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வாரம தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை வடிவமைக்கும் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications