சர்வதேச அளவில் பாதுகாப்பான முதலீடு என்ற உடனே அனைவரின் கவனத்திற்கும் வருவது தங்கம் தான். சாதாரண குடும்பங்கள் தொடங்கி பெரிய பெரிய நாடுகளின் அரசாங்கங்கள் வரை தங்கத்தை பெரும் அளவில் வாங்கி கையிருப்பாக வைத்துக் கொண்டுள்ளனர். அப்படி இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன்கள் தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களில் தங்கம் அவசர காலத்திற்கு பணமாக்குவதற்கான ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்திய குடும்பங்களில் முதலீடு, சேமிப்பு என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். இப்படி இந்திய குடும்பங்கள் வசம் பல ஆயிரம் டன்கள் தங்கம் இருக்கிறது.
செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகரும் நிதி ஆய்வாளருமான ஏ.கே.மந்தன் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இந்திய குடும்பங்களிடம் 750 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தங்கம் சேர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர் உலகிலேயே அதிகளவு தங்கம் வைத்திருக்கும் ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. இந்த தங்கம் இந்திய குடும்பங்களிடம் தான் இருக்கிறது என கூறியுள்ளார்.
உலகின் முதல் 10 பொருளாதார நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கும் தங்கத்தின் மொத்தத்தை விட இந்திய குடும்பங்களிடம் அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார். அதாவது 25 ஆயிரம் டன்கள் தங்கம் இந்திய குடும்பங்கள் வசம் இருப்பதாக அவர் கூறுகிறார். அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி , இந்தியா ஜப்பான் மற்றும் துருக்கி ஆகிய முதல் 10 பொருளாதார நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கும் மொத்த தங்கத்தின் அளவை கூட்டினால் கூட இவ்வளவு வராது என அவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் இந்தியர்கள் வசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 2024 செப்டம்பர் மாத இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை 75 , 549 ரூபாய் அப்படி என்றால் 25 ஆயிரம் டன்களின் விலை எவ்வளவு ஆக இருக்கும் என கணக்கிட்டுள்ளார்.
25 ஆயிரம் டன்கள் என்பது 2.5 பில்லியன் கிராம்களுக்கு சமம், எனவே இதன் மதிப்பு 188.9 லட்சம் கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். தற்போது தங்கம் விலையோடு ஒப்பிட்டால் இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என கூறுகிறார். 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் தங்கத்தின் விலை 35 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதாவது 2024 ஏப்ரல் மாதம் 10 கிராம் தங்கத்தின் விலை 68,420 ரூபாய். இது 2025 மார்ச்சில் 92 ,150 ரூபாய் என உயர்ந்திருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தங்கம் விலை உயர்ந்ததால் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பில் 400 பில்லியன் டாலர்கள் சேர்ந்திருக்கிறது என தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications