இந்திய குடும்பங்கள் கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட அதிகமான மளிகைப் பொருட்களை வாங்குகின்றனர், இதனால் பல ரீடைல் மற்றும் FMCG நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வர்த்தக அளவீட்டைத் தொட்டுவிட்டதாகக் கூறுகின்றனர்.
உண்மையில் மக்கள் வாங்கும் மளிகைப் பொருட்களைப் பேக் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் அளவுகள் அதாவது எடை அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.
இதன் மூலம் மக்களின் நுகர்வு அளவு கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை விடவும் 14% குறைவாகவே உள்ளது என்று வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கை கூறுகிறது.
FMCG பொருட்கள்
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2022 வரை, FMCG பொருட்களின் பாக்கெட்டுகளின் சராசரி மாதாந்திர விற்பனையான எண்ணிக்கை 19.2 பில்லியன், அதாவது ஒரு குடும்பத்திற்குச் சராசரியாக 62 பாக்கெட் ஆக இருந்தது.
காந்தார் ஆய்வு
கோவிட் தொற்று முன்பு இதன் அளவு 15 பில்லியன் பாக்கெட் ஆகவும், ஒரு குடும்பத்திற்குச் சராசரியாக 51 பாக்கெட் ஆக இருந்தது எனச் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் காந்தார் தனது FMCG பல்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எடை குறைப்பு
இதே காலகட்டத்தில் விலைவாசி உயர்வை மக்களுக்குக் காட்டக் கூடாது என்பதற்காகப் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் பாக்கெட் எடையைக் குறைத்து தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்தது. இதன் மூலம் பல நிறுவனங்கள் வர்த்தகத்தைக் காப்பாற்றியுள்ளது.
309 கிராம் மட்டுமே
இதேவேளையில் FMCG நிறுவன தயாரிப்புகளின் பாக்கெட் எடை சராசரியாக 438 கிராம்-ல் இருந்து 309 கிராமாகக் குறைந்துள்ளது. இந்த எடை குறைப்பு பெரும்பாலான உணவு பொருட்களில் நடந்துள்ளது, குறிப்பாகப் பாமாயில், கோதுமை, சர்க்கரை, காஃபி ஆகியவற்றில் நடந்துள்ளது.
உணவு பொருட்கள்
இதன் எதிரொலியாக உணவுப் பொருட்கள் பிரிவில் கொரோனா-வுக்கு முன்பு ஒரு வீட்டில் சராசரியாக 23 பாக்கெட் எண்ணிக்கையிலான உணவுப் பொருட்கள் வாங்குகின்றனர் என்றால், மே - ஆகஸ்ட் 2022 காலகட்டத்தில் 31 பாக்கெட் ஆக உயர்ந்துள்ளது எனக் காந்தார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியப் பொருட்கள்
சாக்லேட்டுகள், குளிர்பானங்கள், பிஸ்கட்கள், தின்பண்டங்கள் மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களின் விற்பனை வளர்ச்சியைத் தொடர்கிறது. அதே நேரத்தில் உடல்நலம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் இந்த ஆண்டு தொடர் சரிவைக் கண்டு உள்ளது.
உடல்நலம் மற்றும் சுகாதாரம்
கொரோனா தொற்றுப் பாதிப்புகள் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் உடல்நலம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது. குறிப்பாகச் சானிடைசர், வைப்ஸ், மாஸ்க் போன்றவற்றின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது.
சானிடைசர்
கொரோனாவுக்கு முன்பு யாரும் பெரிய அளவில் பயன்படுத்தாத சானிடைசர்-ஐ கொரோனாவுக்குப் பின் திடீரென உருவான டிமாண்ட காரணமாக 200 மில்லி பாட்டில் சானிடைசர் 150 ரூபாய்க்கு வாங்க வேண்டிய இக்காட்டான சூழ்நிலையில் உருவானது யாராலும் மறக்க முடியாது.
வர்த்தகம் சரிவு
ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மாறியது மட்டும் அல்லாமல் சானிடைசர் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின்பு சானிடைசர் உற்பத்தியைத் துவங்கிய பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் தற்போது வர்த்தகம் இல்லாமல் தவித்து வருகிறது.
சானிடைசர் உற்பத்தி
இதில் முக்கியமாக 2021ஆம் ஆண்டின் கடைசியில் ராடிகோ கைதான் நிறுவனம் சானிடைசர் உற்பத்தியைப் பெரிய அளவில் குறைத்தது. டாபர் நிறுவனம் சானிடைசர் உற்பத்தி தளத்தை மூடிவிட்டு மொத்தமாக வெளியேறியுள்ளது, இதன் தாக்கம் தான் தற்போது விற்பனையில் எதிரொலித்துள்ளது.


Click it and Unblock the Notifications