இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சான்றாக அமைந்தது பிப்ரவரி மாதத்தின் ஜிஎஸ்டி வரி வசூல். பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ. 1.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் ரூ. 1.96 லட்சம் கோடியாக இருந்தது. தொடர்ந்து 12-வது மாதமாக ரூ. 1.7 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூலில் இருந்து, அரசு திருப்பிச் செலுத்திய ரீஃபண்ட் தொகையை கழித்த பிறகு, மீதமுள்ள நிகர வசூல் கடந்த ஆண்டை விட 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருந்ததால், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வரி வசூல் சற்று குறைவாக உள்ளது.

அதோடு கடந்த 4 மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த ஜிஎஸ்டி வரி வசூல் ஜனவரி மாதத்தில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு 12.3 சதவீதம் அதிகரித்தது. பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று வெளியான தரவுகளின்படி இந்தியாவின் பொருளாதாரம் 3-வது காலாண்டில் மீண்டெழுந்தது.
இந்தியப் பொருளாதாரம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 6.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இது முந்தைய காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 5.6 சதவீதமாக மட்டுமே இருந்தது.
பொருளாதார வல்லுனர்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் 3-வது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி மூன்றாம் காலாண்டின் வளர்ச்சி 6.2 சதவீதமாக மட்டுமே உள்ளது. ஆனால் அரசாங்கம் 2025-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.5 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளி விவரங்கள் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. அதன் பிறகு பேசிய பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், பொருளாதார வளர்ச்சி 4-வது காலாண்டில் அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் சமீப காலமாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது, உதாரணமாக டெஸ்லா நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை டெஸ்லா ஆலை இந்தியாவில் அமைக்கப்பட்டால் கண்டிப்பாக வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications