இந்திய விமான போக்குவரத்துத் துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர், கோ பர்ஸ்ட் ஆகியவை திவாலான நிலையிலும், ஏர் இந்தியா டாடா குழுமம் பெரும் பலத்துடன் இறங்கிய பின்னரும், ஸ்பைஸ்ஜெட் தனது வர்த்தகத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தடுமாற்றம் அடைந்து வரும் வேளையிலும் இண்டிகோ இந்திய விமான போக்குவரத்து சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் இண்டிகோ விமான நிறுவனத்தின் ப்ரமோட்டர்களான பத்தியா குடும்பத்தினர், இந்நிறுவனத்தின் IPO வெளியீட்டுக்குப் பிறகு முதன் முறையாக 2% பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இந்த பங்குகளைப் பத்தியா குடும்பத்தினர் Block Deal வாயிலாக சுமார் ரூ.3,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விற்பனை செய்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இண்டிகோ பங்குகளின் விலை இன்றைய வர்த்தக முடிவில் 4.10 சதவீதம் சரிந்தது. கடந்த ஒரு மாதத்தில் 7.15 சதவீதமும், 2024 ஆம் ஆண்டில் 47,05 சதவீதமும் உயர்ந்த பங்குகள் தற்போது 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இந்த பிளாக் டீல் விற்பனையில், இண்டர் குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் 83.7 லட்சம் பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டன. ஒரு பங்கு ரூ.4,406 என்ற விலையில் இந்த பங்கு விற்பனை நடந்துள்ளது.
ஐபிஓ வெளியீட்டுக்குப் பிறகு, இண்டர் குளோப் அவியேஷன் நிறுவனத்தின் பங்குகளைப் பத்தியா குடும்பத்தினர் விற்பனை செய்வது இதுவே முதல் முறையாகும். மிகவும் போட்டி மிகுந்த சந்தையில் தொடர் விரிவாக்கம் செய்யும் இண்டிகோ-வின் இந்த பங்கு விற்பனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024 மார்ச் நிலவரப்படி, இண்டர் குளோப் அவியேஷன் நிறுவனத்தின் ப்ரமோட்டர்களில் ஒருவரான ராகுல் பத்தியா, இண்டர் குளோப் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மூலமாக 37.91% பங்குகளை வைத்திருந்தார் என பிஎஸ்இ தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த பிளாக் டீல் விற்பனையில் பங்குகளை வாங்கியவருக்கு 365 நாட்கள் Lock-Up காலம் பொருந்தும். இதனால் இந்த பங்குகளை 365 நாட்களுக்கு விற்கவோ அடமானம் வைக்கவோ முடியாது.
இண்டிகோ ப்ரமோட்டர் குழு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஐரோப்பாவில் தங்கள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக ஹாஸ்பிடாலிட்டி துறையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம், இண்டிகோ விமானச் சேவை நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் என்டர்பிரைசஸ் நிறுவனம், ஐரோப்பிய நகரங்களில் தனித்துவமான வடிவமைப்புடன் ஹோட்டல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய லைஃப்ஸ்டைல் ஹோட்டல் பிராண்டின் பெயர் "மியூரோ", இது வரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது இண்டர் குளோப் என்டர்பிரைசஸ் நிறுவனம். இந்த ஹோட்டல் செயின் இந்த கோடை காலத்தில் பாரிஸ் மற்றும் பார்சிலோனாவில் அறிமுகமாகவுள்ளது, மேலும் பல ஐரோப்பிய சந்தைகளில் இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications