பொதுவாக நாம் அலுவலக பயணம் அல்லது சுற்றுலா செல்லும்போது ஹோட்டல்களில் தங்குவோம். சில ஹோட்டல்களின் சிறப்பம்சங்கள் காரணமாக அந்த ஹோட்டல்களில் தங்குவதற்கு மக்கள் விரும்புவார்கள். சில ஹோட்டல்கள் அதன் கட்டிட வடிவமைப்பு காரணமாக உலக அளவில் பெயர் பெற்றுள்ளன.
உதாரணமாக, உலகின் அதிக அறைகள் கொண்ட பெரிய ஹோட்டல் என்றால், அது மலேசியாவின் பகாங்கில் உள்ள ஃபர்ஸ்ட் வேர்ல்டு ஹோட்டல். 2 டவர்களை கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தம் 7,351 அறைகள் உள்ளன. அதேமாதிரி உலகின் உயரமான ஹோட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜிவோரா ஹோட்டல். இந்த ஹோட்டல் கட்டிடத்தின் உயரம் 1,169 அடி, இதில், மொத்தம் 75 தளங்கள் உள்ளன.

உலகின் பெரிய மற்றும் உயரமான ஹோட்டல்களை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். ஆனால் உலகின் குறுகிய அல்லது ஒல்லியான ஹோட்டல் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?. தீவுகள் நாடான இந்தோனேஷியாவின் மத்திய ஜாவாவில் உள்ள சலாதிகாவில் மெர்பாபு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள 'பிடு ரூம்ஸ்' என்ற ஹோட்டல்தான் உலகின் ஒல்லியான ஹோட்டல் என்று கூறப்படுகிறது.
மொத்தம் 7 தளங்கள் கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தமே 7 அறைகள் மட்டுமே உள்ளது. இந்த ஹோட்டலில் அறையில் இருந்து நேரடியாக மலையின் கம்பீரமான அழகை ரசிக்கலாம் என்பது இந்த ஹோட்டலின் கூடுதல் சிறப்பம்சம்.
இந்தோனேஷியாவின் பிரபல கட்டிட கலைஞர் ஆரே இந்திராவின் சொந்த ஊரில் ஒரு சிறிய, கவனிக்கப்படாத நிலம் இருப்பது அவரது கண்ணில் பட்டது. கட்டிட கலைஞரான அவருக்கு அந்த இடத்தில் ஹோட்டல் கட்டினால் வித்தியாசமாக மற்றும் தனித்துவமாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இதனையடுத்து 2.8 மீட்டர் அகலம் கொண்ட அந்த நிலத்தில் தனித்துவமான அறைகளை கொண்ட 5 மாடி ஹோட்டலை கட்டினார். இது அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த ஹோட்டல் சலாதிகாவின் கலாச்சாரத்திற்கு ஒரு சின்னமாக அமைந்துள்ளது.
பிடுரூம்ஸ் ஹோட்டல் அறையில் தங்கும் விருந்தினர்கள் அங்கு இருந்து மலையை பார்த்து ரசிக்கலாம். ஒவ்வொரு அறையிலும் இரட்டை படுக்கை மற்றும் ஷவருடன் கூடிய ஒரு சின்ன குளியலறை மற்றும் டாய்லெட் வசதிகள் உள்ளன. ஹோட்டலின் மேல் தளத்தில் ஒரு பார் மற்றும் உணவகம் உள்ளது.
பிடு ரூம்ஸ் உரிமையாளரும், கட்டிட கலைஞருமான ஆரே இந்திரா கூறுகையில், மக்கள் சலாதிகாவை ஒரு புதிய வழியில் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய புதிய வகை சுற்றுலாவை உருவாக்க இது எனது புதிய தளமாக மாறியுள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களை தவிர்த்து, மிகப்பெரிய சவால் என்னவென்றால் விருந்தோம்பல துறையை சுற்றியுள்ள பொதுவான மனநிலையாகும்.
அதாவது மிகப் பெரியது, உயரமானது மற்றும் மிகவும் ஆடம்பரமான என்று சொல்லப்படுகிறது. இங்கே நாங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறோம். 2022 டிசம்பரில் பிடுரூம்ஸ் திறக்கப்பட்டது முதல் இங்கு தங்கியவர்களில் 95 சதவீதம் பேர் இந்தோனேஷியர்கள். இதுவரை நாங்கள் எங்கள் விருந்தினர்களிடம் இருந்து பெறும் எதிர்வினை என்னவென்றால், வசதியாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் இவ்வளவு சிறிய இடம் போதுமா என்று ஆச்சரியப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications