தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை முறையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது முதல் இது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் என்ற குரல்கள் ஒலித்து கொண்டே இருக்கிறது. ஆனால் சில நிகழ்வுகளை பார்க்கும் போது அது உண்மைதானோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரெட்வுட் சிட்டியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனம் இன்பர்மேட்டிகா. நிறுவன கிளவுட் டேட்டா மேனேஜ்மென்டில் நாங்கள் தான் பெரிய ஆள் என்று இந்த நிறுவனமே சொல்லி கொள்கிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்திய அமெரிக்கரான அமித் வாலியா. இன்பர்மேட்டிகாவின் வர்த்தகம் நன்றாக போய் கொண்டிருக்கிறது.
இன்பர்மேட்டிகா நிறுவனம் அண்மையில் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி முடிவுகள் நன்றாக உள்ளது என சாதாரணமாக சொல்லி விட முடியாது, ஜாக்பாட் மாதிரி இருந்தது.
கணித்ததை காட்டிலும் அந்த நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் அமோகமாக இருந்தது. இதனால் நிறுவனம் மொத்தமும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அடுத்து நிறுவனம் செய்த ஒரு காரியம் ஊழியர்களை வேதனையில் தள்ளியுள்ளது.
சுமார் 545 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கான திட்டத்தை இன்பர்மேட்டிகா வகுத்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 10 சதவீதமாகும். இதில் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களில் 90 பேரும் அடங்குவர்.

இன்பர்மேட்டிகா நிறுவனத்தின் வளர்ச்சியில் கணிசமான பங்களித்த 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இரக்கமற்ற முடிவு குறித்து தலைமை செயல் அதிகாரி அமித் வாலியா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடினமான முடிவு என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சிகு சோமைய்யா கூறுகையில், பணிநீக்கம், வணிக செயல்திறனை சீரமைத்து நீண்ட கால வெற்றியில் கவனம் செலுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் நிறுவனம் தங்கள் தலைமை குழுவில் நம்பிக்கையுடன் உள்ளது என்று தெரிவித்தார். நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதி நிலை உள்பட எல்லாம் சிறப்பாக இருக்கும் நிலையில், 10 சதவீத பணியாளர்களை வீட்டுக்கு போக சொல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications