மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்த பட்ஜெட் அறிவிப்பில் தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை உயர்த்தும் அறிவிப்பு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை டாலர் மதிப்பு உயர்ந்த வேளையிலும் அதிகரித்து வருகிறது.
கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரி 15% லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரித்துள்ளதால் இந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

2023 ஜூலை மாதம் மோடி 3.0 அரசு தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளின் இறக்குமதி சுங்க வரி குறைத்ததன் விளைவாக, 2023 ஆகஸ்ட் மாதத்தில் தங்க இறக்குமதி 10.06 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 104% அதிகமாகும்.
உலகளவில் இந்தியா தங்கத்தின் இரண்டாவது பெரிய நுகர்வோராக இருப்பதால், தங்கம் மற்றும் வெள்ளி அதிகமாக இறக்குமதி செய்வது மூலம் நாட்டில் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தும் விஷயமாக தற்போது முதலீட்டு சந்தையில் பேசப்பட்டு வருகிறது, இதனாலேயே இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீது குறைக்கப்பட்ட வரி மீண்டும் அதிகரிக்கப்படும் என கருத்து எழுந்துள்ளது.
சுங்க வரி குறைப்பு மூலம் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரித்துள்ள இதேவளையில் இந்தியாவில் இருந்து எப்போதும் அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஒன்றான ரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி பாதித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதி 23% குறைந்து 1.99 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
இதற்கிடையில் பட்ஜெட்டில் வரி உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து கடந்த வாரம் எம்.சி.எக்ஸ் தங்க விலை 1% உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.79,019 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நிபுணர்கள் தங்கம் வாங்குவது குறித்து முக்கியமான கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
தங்க இறக்குமதி மீது சுங்க வரி உயர்த்தப்பட்டால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை அதிகரிக்கும், இதேவேளையில் சர்வதேச சந்தையில் நிலவும் தடுமாற்றம் காரணமாகவும் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து விலை உயர வாய்ப்புள்ளது. ஆனால் வரி உயர்வால் நீண்ட கால அடிப்படையில் தங்கம் மீதான இறக்குமதி அளவை குறைக்கலாம் என கூறுகின்றனர்.
2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியா தங்க இறக்குமதிக்கு 47 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 42.30 பில்லியன் டாலரை மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தை போக்கை கவனமாக கண்காணித்து, தங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். இதேவேளையில் கோல்டுமேன் சாக்ஸ் 2026 நடுப்பகுதியில் தான் தங்கம் விலை 3000 டாலர் தொடரும் என கணித்துள்ளது இதையும் நினைவில் வைத்துக்கொண்டு முடிவு செய்வது முக்கியமாகும்.


Click it and Unblock the Notifications