மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களின் விலை இதன் மூலம் குறைய போகிறது. இதனால் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மிடில் கிளாஸ் மக்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
செப்டம்பர் 22 ஆம் தேதியிலிருந்து இந்த புதிய வரி விதிப்பு என்பது நடைமுறைக்கு வருகிறது என்பதால் இந்த ஆண்டு பண்டிகை காலம் இன்னும் கொண்டாட்டத்தோடு இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கான வரியை குறைத்து இருந்தாலும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரியை அதிகரித்திருக்கிறது . ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் என்பது நல்ல செய்தியை கொடுக்கவில்லை.

இந்தியாவில் 5, 18 மற்றும் 40% என மூன்று வகையான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் தான் இனி இருக்கும். இதில் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவ பொருட்கள் பட்டியலில் வரக்கூடிய பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல சொகுசு கார் கார்கள் அதிக எஞ்சின் திறன் கொண்ட வாகனங்கள் ,குளிர்பானங்களுக்கு 40 சதவீத வரி விதிப்பும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதோடு ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு இதுநாள் வரை விதிக்கப்பட்டு வந்த 28% என்ற ஜிஎஸ்டி வரி 40 % என உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 40 % என உயர்த்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இதுவரை ஐபிஎல் போட்டிகளுக்காக செலுத்திய டிக்கெட் கட்டணத்தை விட இனி கூடுதல் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.

இது தவிர கேசினோ மற்றும் ரேஸ் கிளப்புகளுக்கான கட்டணங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியும் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பார்த்தால் வரும் 22-ம் தேதியில் இருந்து இந்த புதிய ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைக்கு வருகிறது. இதன்படி ஐபிஎல் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விலைக்கு 40 சதவீதம் ஜிஎஸ்டி என குறிப்பிடுகிறது.
இதற்கு முன்பு ஒரு ஐபிஎல் டிக்கெட் விலை 1000 ரூபாய் என்றால் 28% ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து 1280 ரூபாயை நாம் கட்டணமாக செலுத்தி வந்தோம், அதுவே தற்போது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் 1000 ரூபாய் டிக்கெட் 400 ரூபாய் ஜிஎஸ்டி என 1400 ரூபாயாக செலுத்துவோம் . அதாவது இதற்கு முன்பு செலுத்திய கட்டணத்தை கூடுதலாக 120 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும் .
ஆடம்பர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என வகைப்படுத்தப்பட்ட அனைத்து விளையாட்டு நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளுக்கும் இது பொருந்தும். மற்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டியை குறைத்து இருப்பதால் ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே ஐபிஎல் டிக்கெட் வாங்கும் போது டிக்கெட் கட்டணம், 40% ஜிஎஸ்டி, ஆன்லைன் பதிவுக்கான கட்டணம், மைதான சர்வீஸ் கட்டணம் ஆகியவற்றை சேர்த்து நம் பாக்கெட்டில் இருந்து கூடுதல் பணம் கொடுக்க வேண்டி இருக்கும்.
ஆனால் சர்வதேச போட்டிகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது 18 சதவீத ஜிஎஸ்டி வரி தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . அதாவது இந்திய அணி விளையாட கூடிய போட்டிகளுக்கு டிக்கெட் விலை மாற்றமில்லை, ஐபிஎல் ரசிகர்களுக்கு தான் இந்த கூடுதல் விலை சுமை.


Click it and Unblock the Notifications