ஈரான் போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலர்களை கடந்து விட்டது. ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் தேதி போரை தொடங்கின. இந்த போர் ஈரான் மட்டுமில்லாமல் வளைகுடா நாடுகள், ஆசிய நாடுகளை பாதிக்க தொடங்கியுள்ளது. ஈரான் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் அனுமதிக்காததால் கச்சா எண்ணெய் போக்குவரத்து நின்று போயுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியாவுக்கு தேவையான 60% எல்பிஜி, கச்சா எண்ணெய் உள்ளிட்டவை வளைகுடா நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 6 வாரமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எல்பிஜி வரவில்லை. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நிலைமை இன்னும் மோசம்.

கச்சா எண்ணெய் சப்ளை நின்று போனதால் , உலக சந்தையில் கச்சா எண்ணேய் விலை பல மடங்கு உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும் சப்ளை குறைந்ததாலும் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் கச்சா எண்ணெயில் அதிக முதலீடு செய்தனர். எனவே சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்தது.
இதன் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. இது உள்ளூர் சந்தையிலும் எதிரொலித்தது. ஈரான் போர் தொடங்கியதற்கு பிறகு இந்தியாவில் தங்கத்தின் விலை பெருமளவில் குறைந்தது. ஈரான் போர் தொடர்பான ஒவ்வொரு தகவல்களும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. கடந்த வாரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை எடுத்து தங்கத்தின் விலை லேசாக உயர்வு கண்டது. ஆனால் தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதால் உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை சுமார் ஒரு சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் தற்போது 4450 டாலர்கள் என சரிவை சந்தித்திருக்கிறது. வெள்ளியின் விலை இரண்டு சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 74 டாலர்கள் என வர்த்தகமாகிறது. இது இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும். இன்று சில்லறை விற்பனையில் தங்கம், வெள்ளி விலை குறைவது உறுதி.
அதே வேளையில் கச்சா எண்ணெயின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதம் உயர்ந்து 103 டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு, கேசோலின் ஆகியவற்றின் விலைகளும் உயர்வு கண்டுள்ளன.ஈரான் போர் பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை தொடர்ந்து குறையும் , ஆனால் கச்சா எண்ணெய் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை உயர்வது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வித்திடும். இது பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வதற்கு காரணமாக அமையும்.


Click it and Unblock the Notifications