இந்தியாவில் சௌகரியமான பயணம் கிடைப்பதாலும் குறைந்த விலையில் நீண்ட தொலைவை பயணிக்கலாம் என்பதாலும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் ரயில்களில் பயணம் செய்யும் போது மக்கள் வீட்டில் இருந்தே உணவு தயாரித்து எடுத்து செல்வார்கள். ஆனால் காலப்போக்கில் அது எல்லாமே மாறிவிட்டது.
நீண்ட தூரம் பயணம் செய்ய கூடியவர்கள் ரயில்களில் விற்பனை செய்யக்கூடிய உணவுகளையே வாங்கி கொள்கிறார்கள். ஆனால் இவ்வாறு ரயில்களில் விற்பனை செய்யக்கூடிய உணவு பொருட்களுக்கு அநியாய விலை வசூல் செய்யப்படுவதாக பயணிகள் தொடர்ச்சியாக புகார் கூறி வருகின்றனர். இந்த சூழலில் தான் ஐஆர்சிடிசி ஒரு முக்கியமான நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது .

ரயில்களில் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் அநியாய விலைக்கு ரயில்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. முதல்கட்டமாக வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி போன்ற பிரீமியம் ரயில்களில் உணவு விற்பனை செய்யக்கூடிய நபர்களுக்கு கட்டுப்பாடுகள் அமலில் வந்துள்ளன.
வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி போன்ற பிரீமியம் ரயில்களில் உணவு விற்பனை செய்யக்கூடிய நபர்களுக்கு சீருடை கட்டாயம். அந்த சீருடைகளிலேயே ஹெல்ப்லைன் நம்பர் அச்சிடப்பட்டிருக்கும். எனவே அவர்கள் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்கிறார்கள் என தெரிந்தால் உடனடியாக பயணிகள் அந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் தரலாம்.

அது மட்டும் உணவு வினியோகம் செய்பவர்களுக்கு ஐடி கார்டு வழங்கப்படும். அதில் இரண்டு கியூஆர் கோடுகள் இடம்பெற்றிருக்கும். முதல் கியூஆர் கோடில், என்னென்ன உணவுகளை விற்பனை செய்கிறார்கள் என்ற பட்டியலும் , அதன் விலையும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்கிறார்கள் என தொடர்ச்சியாக புகார் அளித்ததன் பேரிலேயே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவதாக உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி நாம் பணத்தை நேரடியாகவே டிஜிட்டல் முறையில் செலுத்தி விடலாம். அதாவது உணவு விநியோகம் மட்டுமே அவர்களின் வேலையாக இருக்கும். நாம் கையில் ரொக்கமாக பணம் கொடுத்து உணவை வாங்க வேண்டிய அவசியம் இல்லை , இதன் மூலம் சில்லறை பிரச்சினைகளும் ஏற்படாது.
தற்போதைக்கு இது ராஜதானி , சதாப்தி , வந்தே பாரத் போன்ற நீண்ட தூரம் செல்லக்கூடிய பிரீமியம் ரயில்களிலும் மேற்கு மற்றும் மத்திய ரயில்வேயிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. கூடிய விரைவில் அனைத்து ரயில்வேயிலும் இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது என ஐஆர்சிடிசி தெரிவித்திருக்கிறது. எனவே ரயில்களில் பயணம் செய்யும் போது பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவை சரியான விலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மோசடிகளையும் அதிக விலைக்கு உணவு விற்கப்படுவதையும் தடுக்கும் என ஐஆர்சிடிசி கூறுகிறது.


Click it and Unblock the Notifications