வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் உணவு வழங்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் ஒரு வேலைக்கு சுமார் 8 முதல் 10 வகையான உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நான்காக குறைக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் மும்பை பெங்களூரு வழித்தடங்களில் காலை உணவாக இட்லி மற்றும் வடையுடன் சாம்பார், சட்னி, அவல் உப்புமா அல்லது ரவை உப்புமா ஆகியவை வழங்கப்படுகின்றன.
மதியம் மற்றும் இரவு உணவிற்கு சப்பாத்தி, சாதம், பருப்பு ஆகியவற்றுடன் சைவம் அல்லது அசைவத்தில் ஏதேனும் ஒரு மெயின் டிஷ் வழங்கப்படுகிறது. அசைவத்தில் சிக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பு வந்தே பாரத் ரயில்களில் சூப், ஆம்லெட், சாண்ட்விச், மோர், சாக்லேட் என விதவிதமான உணவுகள் வழங்கப்பட்டன.

மதியம் மற்றும் இரவு நேரங்களில் காய் கறி கூட்டு, தயிர், சாலட், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது மெனுவிலிருந்து இந்த உணவுகள் நீக்கப்பட்டுள்ளன. நீண்ட தூரம் ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவு ஆறிப்போய் இருந்ததாக பயணிகளிடமிருந்து புகார் வந்துள்ளது. இதை தொடர்ந்து IRCTC நவம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தப் புதிய மெனுவை அறிமுகம் செய்தது.
ரயில்களில் சின்ன சமையலறை இடமே இருக்கிறது. அதோடு குறைந்த பணியாளர்கள் மற்றும் குறைவான நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான உணவை சமைக்க வேண்டி இருந்ததால் இந்த சிக்கல்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு குறித்து மக்களிடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து மெனு தயார் செய்யப்பட்டுள்ளது. விமானங்களில் வழங்கப்படுவது போல இரண்டு மூன்று மெனுவை வழங்க திட்டமிட்டுள்ளோம். விமான நிறுவனங்கள் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு உணவு விநியோகம் செய்யும் கிளவுட் கிச்சன்களிடமிருந்து தான் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இங்கு மிகவும் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உணவின் எடை குறைக்கப்படவில்லை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 700 முதல் 750 கிராம் வரையிலான உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த அளவு தற்போது 450 முதல் 500 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளின் எடை குறைக்கப்படவில்லை. சப்பாத்தி இதற்கு முன்னர் எத்தனை வழங்கப்பட்டதோ அதே தான் இப்போதும் வழங்கப்பட உள்ளது. ரயில்வே நிர்வாகம் தேவையற்ற சைட் டிஷ்களை மட்டுமே நீக்கியுள்ளது. கிளவுட் கிச்சன் மூலமாக உணவு விநியோகம் தொடங்கப்பட்டதிலிருந்து மக்களிடமிருந்து வரும் புகார்கள் 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
