தொழில் தொடங்குவதற்கு லட்சங்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை மீண்டும் ஒருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சித்தேம் சுதீர். இவர் ஒரு வேளாண் பட்டதாரி. 2018-ஆம் ஆண்டில் வெறும் ரூ.50,000 முதலீடு செய்து இட்லி கடை திறந்து.. தற்போது மாதா மாதம் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் பார்த்து வருகிறார்.
விசாகப்பட்டினத்தின் எம்விபி காலனியில் அமைந்திருக்கிறது சித்தேம் சுதீரின் உணவகமான "வசேனா போலி". இந்த உணவகத்தில் அரிசிக்கு பதிலாக எல்லாமே சிறுதானியங்களை கொண்டு ஆரோக்கியமான முறையில் செய்யப்படுகிறது. சிறுதானிய உணவுகளை விரும்பி உண்பவருக்கு இந்த ஸ்பாட் மிகவும் பிடிக்கும் என்றே சொல்லலாம்.

2018-ஆம் ஆண்டில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த தொழில் தற்போது பெரிய அளவில் வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. சித்தேம் சுதீர் தன்னுடைய உணவகத்திற்காக விளம்பரங்கள் எதுவும் செய்யவில்லை. உணவின் தரத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கத் தொடங்கினர்.
வழக்கமான உணவுக்கு பதிலாக சிறுதானிய இட்லி மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளே இந்த உணவகத்தின் சிறப்பம்சமாகும். சுதீரின் உணவகத்தில் வழங்கப்படும் இட்லிக்கு விசாகப்பட்டினத்தில் பெரிய பேன் பேஸ் இருக்கிறது. அதோடு எட்டு வகையான சிறுதானியங்களை கொண்டுதான் இந்த இட்லி தயாரிக்கப்படுகிறது.
ஆந்திராவின் பாரம்பரிய முறைப்படி பயன்படுத்தப்படும் விஸ்தாராக்கு இலைகளில் தான் இந்த இட்லி வேக வைக்கப்படுகிறது. இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுரைக்காய், இஞ்சி மற்றும் கேரட் போன்ற காய்கறிகளைக் கொண்டு சட்னி தயாரிக்கப்படுகிறது. தன்னுடைய உணவக வணிகத்தின் மூலம் மாதம் தோறும் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் பார்த்து வருகிறார்.
பெட்டர் இந்தியா என்ற இணையதளம் சித்தேம் சுதீரிடம் ஒரு நேர்காணலை நடத்தியது. அதற்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியாவில் சிறுதானியங்கள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இவற்றில் அதிக அளவு இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் ஃபோலேட், வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே போன்ற முக்கியமான வைட்டமின்களும் உள்ளன.
அரிசியைவிட சிறுதானியங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. சிறுதானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. சிறுதானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கவும் உதவுகின்றன. ஆனால் இவை எல்லாம் உடலுக்கு கிடைக்க வேண்டுமானால் சிறுதானியங்களை சரியான முறையில் சமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
சித்தேம் சுதிர் வெறும் உணவக வணிகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆந்திராவின் பிற பகுதிகளான ஸ்ரீகாக்குளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருக்கும் பழங்குடியின மக்களிடமிருந்து தான் சிறுதானியங்களை பெறுகிறார். ஒவ்வொரு மாதமும் சுமார் 700 கிலோ வரையிலான சிறுதானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து அங்குள்ள விவசாயிகளுக்கும் உதவி வருகிறார். ஒருபுறம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதோடு பழங்குடியின விவசாயிகளுக்கும் உதவி வரும் சுதீர்.. தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications
