மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது இரண்டாவது பட்ஜெட்டில் (2015) தங்க பத்திரம் திட்டத்தை (எஸ்ஜிபி) அறிவித்தார். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக காகித வடிவத்தில் வாங்குவதாகும். தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் மோடி அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்துக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கடைசியாக 2024 பிப்ரவரியில் தங்க பத்திர வெளியீடு நடந்தது. அம்மாதம் 12ம் தேதி தொடங்கி 16ம் தேதி தங்க பத்திர வெளியீடு நிறைவடைந்தது.ஒரு கிராம் ரூ.6,262 என்ற விலையில் பத்திர வெளியீடு நடந்தது. அதன் பிறகு இது வரையிலான காலத்தில் எந்தவொரு தங்க பத்திர வெளியீடும் நடைபெறவில்லை. இதற்கிடையில் கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரியை அரசு குறைத்தது.
இதனால் மத்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தங்க பத்திர திட்டத்தை ரத்து செய்து விட்டதாக ஊக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தங்க பத்திர திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டத்தை எதிர்வரும் பட்ஜெட்டில் அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஆலோசனை நிறுவமான ஹம் பௌஜி இனிஷியேட்டி்வ்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கர்னல் சஞசீவ் கோவிலா கூறுகையில், தங்க பத்திரம் திட்டம் தங்கத்தில் முதலீடு செய்வற்கான வரி திறனுள்ள மற்றும் ஆபத்து இல்லாத வழியை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. இந்த இரட்டை நன்மை, வலுவான மாற்று இல்லாமல் இந்த திட்டத்தை நிறுத்துவது சாத்தியமில்லை.

தங்க பத்திர திட்டத்தை நிறுத்தினால் அது முதலீட்டாளர்களை உலோக வடிவ தங்கத்தில் முதலீடு செய்ய தள்ளும்.தங்க பத்திர திட்டத்தை முழுவதுமாக நீக்குவதற்கு பதிலாக அரசாங்கம் அந்த திட்டத்தை செம்மைப்படுத்தலாம். பெண்கள் மற்றும் கிராமப்புற முதலீட்டாளர்கள் போன்ற குறிப்பிட்ட மக்கள்தொகை பிரிவினரை இலக்காக கொண்டு தங்கம் பத்திரம் வெளியிடலாம். பெரிய அளவில் மக்களும் அணுக கூடியதாக மாற்ற குறைந்த மதிப்பில் தங்க பத்திரம் வெளியிடலாம். செயல்பாட்டு செலவினங்களை குறைக்க மற்றும் நிதி சேவையை ஊக்குவிக்க டிஜிட்டல் முறையில் மட்டுமே பத்திரங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.
எஸ்கேஐ கேபிடலின் நிர்வாக இயக்குனர் நரிந்தர் வாத்வா கூறுகையில், தங்க பத்திர வெளியீட்டை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்தால், இந்த திட்டம் வழங்கும் சலுகைகள் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். பெரும்பாலும், 2025 பட்ஜெட்டில் தங்க பத்திர திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரலாம் அல்லது தங்க பணமாக்கலின் வேகத்தை தக்க வைக்க பொருந்தும் திட்டங்களை கொண்டு வரலாம் என்று தெரிவித்தார். ஆன்லைன் பத்திர தளமான ஜிராஃப்பின் இணை நிறுவனர் சவுரவ் கோஷ் கூறுகையில், புதிய தங்க பத்திரங்கள் வெளியீடுகள் இல்லாத நிலையில் முதலீட்டாளர்கள் மாற்று வழிகளை ஆராயலாம் என தெரிவித்தார்.
மிரா மணி நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனந்த் கே.ரதி கூறுகையில், தங்க பத்திர திட்டம் என்பது தங்க இறக்குமதியை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு விலையுயர்ந்த நடவடிக்கையாகும். இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு வந்தால் தங்கம் விலை நிலையாக இருக்கும் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் விலை உயர்ந்ததோடு, அரசாங்கத்துக்கு எதிர்பாராத சவால்களையும் சந்திக்க வழிவகுத்தது. நிதி சவால்கள் மற்றும் தங்க பத்திர திட்டத்துடன் தொடர்புடைய சாத்தியமான இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டால் தங்க பத்திரம் வெளியீடுவதற்கான சாத்தியக் கூறு கேள்விக்குறியாக உள்ளது.
ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சி தலைவர் அக்ஷய் சின்சல்கர் கூறுகையில், 2025 பட்ஜெட்டில், தங்க பத்திர திட்டத்துக்கு மாற்றாக அறிமுகப்படுத்த பல விருப்பங்கள் உள்ளன. இதில், தங்கத்தை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் தயாரிப்புகள், தங்க மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இடிஎஃப்களை மிகவும் தீவிரமாக ஊக்குவிப்பது மற்றும் முதலீட்டாளர்களுக்கு வரி மற்றும் பல்வகைப்படுத்துதல் சலுகைகளை வழங்கக்கூடிய தங்க சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது ஆகியவை அடங்கும் என தெரிவித்தார்.
Story written by: Subramaian


Click it and Unblock the Notifications