இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி பான் கார்டு தொடர்பான பல்வேறு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு சமர்ப்பிப்பது கட்டாயமாகியுள்ளது.
நிலம் வாங்குவதில் தொடங்கி தங்க நகை வரை குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் பான் எண்ணை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். கருப்பு பண புழக்கம், வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுக்க வருமான வரித்துறை கொண்டு வந்துள்ள முக்கியமான மாற்றம் இது. குறிப்பாக தங்கம் வாங்குவோர் இவற்றை தெரிந்து கொள்வது கட்டாயம்.

வருமான வரி சட்டம், 2026-இன் விதி 159-இன் கீழ், 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம். அதாவது நீங்கள் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பு கொண்ட தங்கம் வாங்கும் போது பான் கார்டு தர வேண்டிய தேவையில்லை. ஆனால் நீங்கள் வாங்கும் தங்கத்திற்கான பில் 2 லட்சத்தை கடக்கிறது என்றால் கட்டாயம் உங்களின் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
இன்றைய தேதியில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,12,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படி பார்த்தால் 18% செய்கூலி , சேதாரம் கொண்ட ஒரு பவுன் செயினை இன்று வாங்கினால் நாம் கடைக்கு 1,36,000 ரூபாயை செலுத்த வேண்டும். அதுவே ஒன்றரை சவரன் அதாவது 12 கிராம் செயின் வாங்கினால் கூட அதன் விலை 2 லட்சத்தை கடக்கும்.

எனவே நீங்கள் ஒரு பவுன் நகை வாங்கும் வரை பிரச்சினை இல்லை. ஒன்றரை பவுனுக்கு மேல் நகை வாங்கும் போது அதன் விலை 2 லட்சத்தை கடந்து விடுவதால் நீங்கள் கட்டாயம் பான் எண்ணை தெரிவித்தாக வேண்டும். வீட்டு திருமணம் போன்ற விசேஷங்கள் என மட்டுமில்லாமல் சாதாரணமாக நீங்கள் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் அதாவது ஒன்றரை சவரனுக்கு மேல் தங்கம் வாங்கினால் கூட பான் எண்ணை கொடுக்க வேண்டும். எனவே நகை கடைக்கு செல்லும் போது கட்டாயம் பான் கார்டை கொண்டு செல்லுங்கள்.
தங்கத்தின் விலை ஒரு சவரனே 1 லட்சத்திற்கு மேல் விற்கும் நிலையில் வருமான வரி துறை 2 லட்சம் ரூபாய் என்ற அளவை மாற்றாமலே வைத்திருக்கிறது. இது தங்கத்திற்கு மட்டுமல்ல நீங்கள் வாங்கும் எந்த பொருளும் 2 லட்சத்திற்கு மேல் விலை கொண்டிருந்தால் அதற்கெல்லாம் பான் எண் குறிப்பிடுவது அவசியம்.
அது தவிர நீங்கள் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலம் அல்லது மனை வாங்கும் போது, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வாகனம் வாங்கும் போது பான் எண் தர வேண்டும். வங்கியில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யும் போது , 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பட்டியலிடப்படாத பங்குகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்றவற்றுக்கும் பான் கட்டாயம்.


Click it and Unblock the Notifications

