தங்கமும் வெள்ளியும் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான உலோகங்கள். ஒரு குழந்தை பிறந்தது தொடங்கி வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலுமே தங்கம் மற்றும் வெள்ளி முக்கியமான அங்கம் வகிக்கின்றன. வெள்ளி கொலுசு தொடங்கி தங்கத்தில் தோடு, செயின் என இந்த இரண்டு உலோகங்களையும் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் தவறாமல் பயன்படுத்தி வருகிறோம்.
தங்கம், வெள்ளி: தங்கம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே பலருக்கும் பிடித்தமான ஒரு உலோகமாக இருக்கிறது . காரணம் பணவீக்கத்தை விட அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீட்டு கருவியாக தங்கம் தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் முதலீட்டு நிறுவனங்களும் சர்வதேச முதலீட்டாளர்களும் தங்கத்தில் தான் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வார்கள்.

தங்கம் விலை உச்சம்: அந்த வகையில் சர்வதேச அளவிலான பல்வேறு நிகழ்வுகள் இந்தியாவிலும் உலக அளவிலும் தங்கத்தின் விலையை பல மடங்கு உயர்த்த செய்திருக்கிறது. ஆனால் தங்கத்தை விட வெள்ளியின் வேகமாக உயர்ந்து வருவது தரவுகளின் மூலம் தெரிய வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்திய சில்லறை விற்பனை சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை ஆராய்ந்தாலே இந்த உண்மை நமக்கு தெரிய வந்துவிடும்.
3 மாதங்களில் தங்கம் எவ்வளவு உயர்வு: கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 8,815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே ஜூலை 16ஆம் தேதியான இன்று ஒரு கிராம் 9100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சரியாக இந்த 3 மாத காலத்தில் பார்த்தால் தங்கத்தின் விலை 3.23 சதவீதம் உயர்ந்துள்ளது.
3 மாதங்களில் வெள்ளி எவ்வளவு உயர்வு?: அதுவே வெள்ளியை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே ஜூலை 16ஆம் தேதியான இன்று ஒரு கிராம் 124 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சரியாக இந்த 3 மாத காலத்தில் பார்த்தால் வெள்ளியின் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
தங்கத்தை அதிக லாபம் தந்த வெள்ளி: அதாவது மூன்று மாத காலத்தில் தங்கத்தை விட வெள்ளியின் மதிப்பு தான் அதிகம் உயர்ந்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் இந்தியாவில் தங்கத்தை விட வெள்ளி அதிகமாக விலை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்துள்ளது.வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது தொழில்துறையிலும் வெள்ளிக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பது தான்.
ஸ்மார்ட்போன்கள், சிப்கள், மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் என பல துறைகளிலும் வெள்ளியின் பயன்பாடு முக்கியமானதாக இருக்கிறது. எனவே தொழில்துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்திருப்பது அதன் விலையையும் உயரச் செய்திருக்கிறது.
ஈடிஎஃப் திட்டங்கள்: இந்திய முதலீட்டாளர்கள் பலரும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான ஈடிஎஃப் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர் என்பதும் அண்மையில் வெளியான தரவுகளில் வெளிவந்துள்ளது. இந்தியாவில் 2017ஆம் ஆண்டு முதல் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களும், 2022ஆம் ஆண்டில் இருந்து சில்வர் ஈடிஎஃப் திட்டங்களும் இருக்கின்றன. இதில் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஜூன் மாதத்தில் கோல்டு ஈடிஎஃப்பில் 2,081 கோடி ரூபாயும், சில்வர் ஈடிஎஃப்பில் 2005 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
வெள்ளிக்கு தான் இப்போ மவுசு:கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் பார்த்தால் இந்தியாவில் கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் 292 கோடி ரூபாய் மட்டுமே புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில்வர் ஈடிஎஃப் திட்டங்களில் 2,278 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் மத்தியில் தங்கத்துக்கு மாற்றான முதலீடாக வெள்ளி படிப்படியாக மாறி வருவதையே இது காட்டுகிறது.


Click it and Unblock the Notifications