இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் திடீரென யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு எம்டிஆர் கட்டணங்களை விதித்துள்ளது. அதாவது 2000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.04% எம்டிஆர் எனப்படும் merchant discount rate-ஆக வசூலிக்கப்படும். இது சாதாரண மக்களுக்கு அல்ல வணிகர்களுக்கு தான் என்றாலும் இலவசம் என்பதில் இருந்து கட்டண முறைக்கு யூபிஐ படிப்படியாக மாறி வருவதையே இது காட்டுகிறது.
எம்டிஆர் கட்டணங்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக வசூலிக்கப்படாது, மாறாக வணிகர்களிடமிருந்து பெறப்படும் என கூறப்பட்டாலும், வர்த்தகர்கள் படிப்படியாக அந்த செலவை மறைமுகமாக பொருட்களின் விலையில் சேர்த்து வாடிக்கையாளர் மீதே திணிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு பணிந்து இந்தியா தனது டிஜிட்டல் கொள்கைகளை மாற்றியுள்ளதா என உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான Global Trade Research Institute கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த சட்ட மாற்றத்திற்கு பின்னால் அமெரிக்காவின் மறைமுக அழுத்தம் இருப்பதாக GTRI அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் 2026-ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வர்த்தக அறிக்கையில், பிரேசிலின் 'Pix' மற்றும் இந்தியாவின் 'UPI மற்றும் RuPay' அமைப்புகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் யூபிஐ இலவசமாக இருப்பதால், மக்கள் கார்டு பயன்பாடுகளை தவிர்த்துவிட்டு யூபிஐ-க்கு மாறினர். இதனால் அமெரிக்காவின் முன்னணி கார்டு நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர்கார்டு தங்களது வருவாயையும் வர்த்தகத்தையும் இழந்ததாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ரூபே கார்டுகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பதையும் எதிர்த்தது என்கிறார்.
ஏனெனில் யூபிஐ வருவதற்கு முன்பும், ரூபே கார்டுகள் வருவதற்கு முன்பும் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் தான் இந்தியாவில் அதிகமாக புழக்கத்தில் இருந்தன. அந்த வகையில் கார்டு பேமெண்ட் மூலம் இந்நிறுவனங்கள் பெரிய வருமானம் பார்த்தன, ஆனால் யூபிஐ இலவசமாக வந்ததால் கார்டுகளை விடுத்து மக்களும் வணிகர்களும் யூபிஐக்கு மாறிவிட்டன. இதனால் வருமானம் குறைந்த விசா, மாஸ்டர் கார்டு போன்ற அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க அரசு மூலம் மறைமுகமாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் எம்டிஆர் கட்டணம் மூலம் யூபிஐ பரிவர்த்தனைகளில் இருந்து வணிகர்கள் மீண்டும் விசா ,மாஸ்டர் கார்டுகள் பக்கம் வரலாம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அமெரிக்காவின் வர்த்தக குற்றச்சாட்டை தீர்ப்பதற்காகவோ அல்லது விசா, மாஸ்டர்கார்டு போன்ற வெளிநாட்டு கார்டு நிறுவனங்களின் லாபத்தை பாதுகாக்கவோ மத்திய அரசு தனது யூபிஐ கொள்கைகளை மாற்றியமைக்க கூடாது என ஜிடிஆர்ஐ அமைப்பு கூறியுள்ளது.
மத்திய அரசு தொடர்ந்து யூபிஐ சேவைகளை இலவசமாக வழங்க வேண்டும் , இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தையும், டிஜிட்டல் பேமெண்ட் அமைப்பின் நீண்டகால நிலைத்தன்மையையும் தற்காத்துக் கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு, சர்வர் பராமரிப்பு மற்றும் முறைகேடுகளை தடுப்பதற்கு வங்கிகளுக்கும் NPCI-க்கும் நிதி ஆதாரம் தேவை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வணிக கட்டணத்தை விதிப்பதற்குப் பதில், பெரிய வணிகர்களுக்கு, பெரிய அளவிலான கட்டணங்களுக்கு மட்டும் சிறிய அளவிலான கட்டணங்களை நிர்ணயிக்கலாம் அல்லது அரசின் மானியங்கள் மூலம் நிதி ஆதாரத்தை ஈடுகட்டலாம் என பரிந்துரைத்துள்ளது.
ஏற்கனவே Google Pay மற்றும் Walmart-ன் PhonePe ஆகிய இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் 80%-க்கும் அதிகமான யூபிஐ பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துகின்றன. ஏனெனில் இந்த எம்டிஆர் கட்டணத்தில் ஒரு பகுதி கூகுள் பே, போன் பே போன்ற நிறுவனங்களுக்கும் செல்கிறது. அந்த வகையில் இந்த கட்டணமும் அவர்களுக்கு சாதகமாகவே அமையும் என சுட்டிக்காட்டும் ஜிடிஆர்ஐ, மத்திய அரசு இந்த விவகாரத்தில் சமரசம் செய்யாமல் உள்நாட்டு கட்டண மற்றும் யூபிஐ அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications


