இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகத் திகழும் முகேஷ் அம்பானி குடும்பம் தற்போது அவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடுகளில் படு பிசியாக இருந்தாலும், இவரது நிறுவனம் தொடர்ந்து அதிரடியாகச் செயல்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மிகப்பெரிய வர்த்தக பிரிவாக உருவெடுத்திருக்கும் ரிலையன்ஸ் ரீடைல், லைப்ஸ்டைல் முதல் உணவு பொருட்கள் வரையில் மக்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் விற்று வருவது மூலம், இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை நிர்வாகம் செய்யும் ஈஷா அம்பானி கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கவனித்துள்ளார். சும்மா இருப்பாரா, உடனே இப்பிரிவில் முன்னோடியாக இருக்கும் பிரெஞ்சு நிறுவனமான Decathlon உடன் நேரடியாகப் போட்டிப்போட புதிய பிராண்டின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆடையை விற்க முடிவு செய்துள்ளார்.
இப்புதிய வர்த்தகத்திற்காக, நாட்டின் முக்கியமான நகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் முக்கிய கடை வீதிகளில் 8,000 முதல் 10,000 சதுர அடி வரையிலான இடத்தைக் குத்தகைக்கு எடுக்கும் பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் ரீடைல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த புதிய பிராண்ட் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஒரு ஷாப்பிங் மால் உரிமையாளர் கூறுகையில், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது புதிய விளையாட்டு பொருட்கள் விற்பனை பிராண்ட் கடைக்கு, ஷாப்பிங் மால் மட்டும் அல்லாமல் வெளி இடத்தைத் தேடிக் கொண்டு இருக்கிறது, அங்கு விளையாடுவதற்கான இடமும் இருக்கும் என்றும் தெரிவித்தார். இது அப்படியே டெகாதிலான் நிறுவனம் கடைப்பிடித்து வரும் பிஸ்னஸ் மாடலாகும்.
2009 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் கடையைத் திறந்த டெகாதிலான் நிறுவனம், கடந்த 2021 நிதியாண்டில் ரூ.2,079 கோடி வருவாயை பெற்றுள்ளது, 2023 நிதியாண்டில் ரூ.3,955 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் மத்தியில் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பு அதன் வாயிலாக விளையாட்டு (Athleisure) ஆடை வகைகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், முன்னணி விளையாட்டு பிராண்டுகளின் விற்பனை வேகமாக வளர்ந்து வருகிறது.
இப்பரிவில் தற்போது டெகாதிலான் மட்டும் அல்லாமல் ஸ்கெட்சர்ஸ், பூமா, அடிடாஸ், அசிக்ஸ் போன்ற நிறுவனங்கள் வருடத்திற்கு சுமார் 35-60 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 2023 ஆம் நிதியாண்டில் இந்த 5 பிராண்டுகளின் மொத்த வருவாய் 11,617 கோடி ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications