இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) இன்று தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. நடப்ுு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கியமான பண்டிகை காலம் என்பதால் லாபத்தை அள்ளியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான 3,145 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10% அதிகரித்து ரூ.3,458 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இது 22% அதிகமாகும்.

மேலும் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் ஆப்ரேட்டிங் வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.74,373 கோடியாக இருந்த ஆப்ரேட்டிங் வருவாய் இந்த டிசம்பர் காலாண்டில் 7% அதிகரித்து ரூ.79,595 கோடியாக உயர்ந்துள்ளது.
இக்காலாண்டில் புதிய தயாரிப்புகளின் அறிமுகம் மற்றும் அதிரடியான டிஸ்கவுன்ட்-ஐ திருவிழா காலத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ரீடைல் அறிவித்தது. இதன் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் மட்டும் அல்லாமல் பழைய வாடிக்கையாளர்களை அதிகப்படியான பொருட்களை வாங்கவும் தூண்டியுள்ளது. இதேவேளையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மேம்படுத்த பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் செய்த நிலையிலும், இதுவும் பெரிய அளவில் உதவியுள்ளது.
மேலும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் EBITDA (வட்டி, வரி, தேய்மானம் மற்றும் அழிவுக்கு முந்தைய லாபம்) அளவும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.6,238 கோடியாக இருந்த EBITDA இந்த காலாண்டில் 9.5% அதிகரித்து ரூ.6,828 கோடியாக உயர்ந்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ரீடைல் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, இந்த 3 மாத காலகட்டத்தில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுமார் 779 புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கடை எண்ணிக்கை 19,102 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கீழ் உள்ள ரீடைல் கடைகளின் மொத்த பரப்பளவு தற்போது 77.4 மில்லியன் சதுர அடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் டிஜிட்டல் மற்றும் புதிய வணிக சேனல்களின் வர்த்தகம் 18% பங்களிக்கிறது.
இந்த காலாண்டு பண்டிகை காலம் என்பதால் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் வலுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. திருவிழா மற்றும் திருமண காலங்களில் வலுவான தேவை காரணமாகச் சராசரி பில் மதிப்பு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் தனது காலாண்டு நிதியியல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 12% அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications