அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்ற லஞ்ச புகாரை தெரிவித்திருக்கும் நிலையில் இஸ்ரேல் நாடு அதானி குழுமம் தொடர்ந்து தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அதே போல ஜப்பானை சேர்ந்த வங்கிகள் அதானிக்கு நிதி ஆதரவை தொடர்வோம் என கூறியுள்ளன.
இந்தியாவில் சில மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மறைத்து அமெரிக்காவிலிருந்து முதலீடுகளைப் பெற்று அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரித்து கௌதம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.
ஆனால் அதானி குழுமம் இந்த லஞ்ச குற்றச்சாட்டை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும். இதனை சட்டரீதியாக தாங்கள் எதிர்கொள்வோம் என்றும் அதானி குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரிய சரிவை சந்தித்தன. இதனிடையே பல்வேறு நாடுகளும் அதானி குழுமத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. குறிப்பாக இஸ்ரேல் அதானி குழுமம் தொடர்ந்து தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்ந்து இஸ்ரேலில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூபன் அசார் ராய்டர்ஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமத்தின் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் வடக்கு இஸ்ரேலில் இருக்கும் துறைமுகத்தில் 70 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. அது மட்டும் இன்றி ராணுவத்திற்கான ட்ரோன் மற்றும் செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளையும் அங்கே நிறுவ இருக்கிறது. இவ்வாறு இஸ்ரேல் நாட்டில் பல்வேறு துறைகளிலும் அதானி குழுமம் முதலீடு செய்திருக்கும் நிலையில் தான் அதானிக்கு ஆதரவான கருத்தினை இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேபோல ஜப்பானை சேர்ந்த வங்கிகளும் அதானி குழுமத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Mizuho Financial Group Inc, Sumitomo Mitsui Financial Group Inc, Mitsubishi UFJ Financial Group Inc ஆகியவை அதானி குழுமத்திற்கு தொடர்ந்து நிதி ஆதரவு வழங்குவோம் என தெரிவித்துள்ளன.
அமெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் மீது ஒரு குறுகிய கால தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் இது அந்த நிறுவனத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஜப்பான் வங்கிகள் தெரிவித்துள்ளன.
இந்த நிறுவனத்திற்கு தேவையான நிதியை நாங்கள் வழங்குவோம் என Mizuho Financial தெரிவித்துள்ளது. அதானி குழுமம் வெற்றிகரமாக தன்னுடைய துறைமுக மற்றும் விமான நிலைய பணிகளை மேற்கொண்டு வருவதும்,பல்வேறு துறைகளில் தங்களை விரிவாக்கம் செய்து வருவதுமே இப்படி வெளிநாட்டு வங்கிகள் ஆதரவளிக்க காரணமாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications