சிகரெட் முதல் உணவு பொருட்கள் வரை பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஐடிசி. பங்குதாரர்களுக்கு வழக்கமாக டிவிடெண்ட் வழங்கி வரும் நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகும். நல்ல டிவிடெண்ட் வருவாய் கிடைக்கும் என்பதற்காகவே இந்நிறுவன பங்குகளை பல முதலீட்டாளர்கள் வாங்கி குவிக்கின்றனர். தற்போது ஐடிசி நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் வழங்க உள்ளது. ஐடிசி பங்குகளை வைத்துள்ள அனைவருக்கும் கிடைக்குமா அல்லது யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ஐடிசி நிறுவனம் 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.6.50 இடைக்கால டிவிடெண்ட் வழங்க உள்ளது. அதாவது ரூ.1 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.6.50 இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது. மார்ச் 6 முதல் 8ம் தேதிக்குள் பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் வழங்க உள்ளதாக அண்மையில் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் ஐடிசி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

டிவிடெண்ட் பெறுவதற்கான பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்காக 2025 பிப்ரவரி 12ம் தேதியை பதிவு தேதியாக ஐடிசி நிர்ணயம் செய்து இருந்தது. டிவிடெண்ட் பெற முதலீட்டாளர்கள் பதிவு தேதிக்கு முன்பு ஐடிசி பங்குகளை வைத்திருக்க வேண்டும். பதிவு தேதிக்கு பிறகு நீங்கள் பங்குகளை வாங்கியிருந்தால் டிவிடெண்ட் பெற நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள் எனவே உங்களுக்கு டிவிடெண்ட் கிடைக்காது. ஐடிசி நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
2024ம் ஆண்டில் ஐடிசி நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.7.50ம், இடைக்கால டிவிடெண்டாக ரூ.6.25ம் வழங்கியது. 2023ம் ஆண்டில் பங்கு ஒன்று இறுதி டிவிடெண்டாக ரூ.6.75ம், சிறப்பு டிவிடெண்டாக ரூ.2.75ம் வழங்கியது. சமீபத்திய ஆண்டுகளில் ஐடிசி நிறுவனம் அதிகபட்சமாக 2020ம் ஆண்டில் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10.15 வழங்கியது. என்னதான் ஐடிசி நிறுவனம் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டை அள்ளிக் கொடுத்தாலும், அந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து அழுத்தத்தில் இருந்து வருகிறது.
இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 16 சதவீதம் வீழ்ச்சி கண்டது. கடந்த 6 மாதத்தில் ஐடிசி பங்கின் விலை 21 சதவீதம் சரிவு கண்டுள்ளது. கடந்த மாதம் இப்பங்கின் விலை 6 சதவீதம் வீழ்ச்சி கண்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 0.48 சதவீதம் குறைந்து ரூ.403.80ஆக இருந்தது. ஐடிசி நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5.05 லட்சம் கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications