இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிடத் தயாராகும் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், இன்று ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜியோ நிறுவனத்தின் தலைவரான ஆகாஷ் அம்பானி. ஜியோ ஐபிஓ குறித்த எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கும் இதேவேளையில் அமெரிக்கா பங்குச்சந்தையில் ஏற்பட்டு இருக்கும் சரிவும், அமெரிக்க பணவீக்க உயர்வும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக தடுமாறி வந்த மும்பை பங்குச்சந்தை நேற்று அமெரிக்க பணவீக்க தரவுகள் வெளியான பின்பு இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குரியீடு 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையும் பசுமை காடாக மாறியுள்ளது.

இதற்கு மத்தியில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கும், நிறுவன முதலீட்டாளர்களுக்கும் முறையாக ஐபிஓ வெளியிட்ட அறிவிக்கும் வகையில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆகாஷ் அம்பானி பேசுகையில் ஜியோவின் இண்டர்நெட் டேட்டா ஆதிக்கம் குறித்து முக்கியமாக தரவை வெளியிட்டார்.
இந்தியாவின் மொத்த இண்டர்நெட் டேட்டா போக்குவரத்தில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான தரவுகளை ரிலையன்ஸ் ஜியோ கையாள்வதாகத் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் சேர்மன் ஆக இருக்கும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்தியாவின் ஜியோ நிறுவனம் 4ஜி சேவை அறிமுகம் செய்த பின்பும் இண்டர்நெட் வேகமும் சரி, டேட்டா பயன்பாட்டு வேகமும் சரி பெரிய அளவில் உயர்ந்தது.
இதைச் சாத்தியப்படுத்த ஜியோவின் அறிமுகத்தின் ஆரம்பக்கட்டத்தில் இலவசமாக சிம் கார்டு கொடுத்து, சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் மலிவான விலையிலே இண்டர்நெட் மற்றும் டெலிகாம் சேவை கொடுத்தது மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று தற்போது இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக மட்டும் அல்லாமல் மிகப்பெரிய இண்டர்நெட் டேட்டா கையாளும் நிறுவனமாக உள்ளது.
ஜியோ பிளாட்பார்ம்ஸ் புதன்கிழமை வெளியிட ரெட் ஹெர்ரிங் புராஸ்பெக்டஸ் (RHP) அறிக்கையின் படி ரீடைல் முதலீட்டாளர்களுக்கான ஐபிஓ கதவுகள் அக்டோபர் 21ஆம் தேதி திறந்து அக்டோபர் 23ஆம் தேதி மூடப்படுகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் அக்டோபர் 19ஆம் தேதி திங்கட்கிழமையே திறக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
இந்த ஐபிஓ-வில் 10 ரூபாய் முகமதிப்புடன் சுமார் 27 கோடி பங்குகளை விற்பனை செய்து ரூ.30,213 கோடி வரையிலான நிதியைத் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை ரூ.1065 - ரூ.1119 என்ற வரம்பில் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் 10.3 லட்சம் கோடி மதிப்பீட்டைப் பெறும் என தெரிகிறது.
இந்த ஐபிஓ-வில் ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்காக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்காகவும் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆகாஷ் அம்பானி உலகிலேயே இண்டர்நெட் டேட்டாவுக்கு மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணி நிறுவனம் என பெருமையுடன் கூறினார்.
உலகம் ஏஐ, டிஜிட்டல்மயமாகும் வேளையில் 2031 நிதியாண்டுக்குள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 1.4 லட்சம் கோடி டாலராக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது, இதில் பெரும் பங்கைப் கட்டாயம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பெறும் என தெரிவித்தார்.
மேலும் 2026 ஜூன் 30 நிலவரப்படி, ஜியோவுக்கு 53.33 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதில் 5ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மட்டும் 28.5 கோடி எனவும். சீனாவுக்கு அடுத்தப்படியாக உலகிலேயே அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக ஜியோ உள்ளது எனவும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் ஆகாஷ் அம்பானி ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் குறித்து வெளியிட்ட முக்கிய தரவுகள்:
ஜூன் காலாண்டு தரவுகளின் படி ஜியோ வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 43.7 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகின்றனர் என தெரிவித்தார்.
2026 நிதியாண்டில் ஜியோவின் EBITDA லாபம் ரூ.76,225 கோடியாகும்.
2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜியோ நிறுவனத்தின் EBITDA லாப வரம்பு 53.3 சதவீதமாகும்.
2024 முதல் 2026 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் ஜியோவின் CAGR வளர்ச்சி விகிதம் 17.8 சதவீதம் என ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஜியோ அறிமுகமான பின் இந்தியாவில் சராசரி டவுன்லோட் வேகம் 2.5 Mbps-ல் இருந்து 68 Mbps ஆக அதிகரித்துள்ளதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
மேலும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் டெலிகாம் சேவை தாண்டி சொழில்நுட்பம், டிஜிட்டல் கனெக்டிவிட்டி, இன்பரா, மொபிலிட்டி, ஹோம் பிராட்பேண்ட், எண்டர்பிரைஸ் மற்றும் சர்வதேச சேவைகளிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார் ஆகாஷ் அம்பானி.


Click it and Unblock the Notifications

