கர்நாடகா பால் கூட்டுறவு கழகம் (KMF) டிசம்பர் 25-ஆம் தேதி அன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நந்தினி இட்லி தோசை மாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தயாரிப்பு 2 அளவுகளில் கிடைக்கிறது. ஒன்று 450 கிராம் பேக். மற்றொன்று 900 கிராம் பேக். 450 கிராம் பேக்கிற்கு 40 ரூபாயும், 900 கிராம் பேக்கிற்கு 80 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரான சித்தராமையா புரதம் சேர்க்கப்பட்ட இட்லி தோசை மாவு தயாரிப்பை அறிமுகப்படுத்தி வைத்தார். டிசம்பர் 26-ஆம் தேதி முதல் பெங்களூரின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பெங்களூரில் இட்லி மற்றும் தோசை மாவு தயாரிப்பதில் iD, அசல் மற்றும் எம்டிஆர் போன்ற பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது நந்தினி பிராண்டும் உள்நுழைந்துள்ளது.

இட்லி தோசை மாவின் புதிய அறிமுகம் சற்று தாமதத்தை எதிர்கொண்டதன் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருந்த இந்த தயாரிப்பு, பிறகு நவம்பர் 26-ஆம் தேதிக்கும், அதற்கு பின்னர் டிசம்பர் மாதத்திற்கும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு KMF மூன்றாம் தரப்பினர் மூலம் தொடர வேண்டிய வணிகத்திற்கு பதிலாக தாங்கள் சொந்தமாகவே மாவை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்ததாக KMF தலைவர் பீமா நாயக் தெரிவித்துள்ளார்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமான மதர் டெய்ரி, சமீபத்தில் டெல்லியில் அதன் "சஃபல்" பிராண்டின் கீழ் இட்லி-தோசை மாவை அறிமுகப்படுத்தியது. நந்தினி இட்லி தோசை மாவிற்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நகர்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் வேலை அழுத்தத்தின் காரணமாக எளிதில் சமைத்து உண்ணக்கூடிய பொருட்களை நாடுகின்றனர். இது போன்ற நபர்களுக்கு கண்டிப்பாக இந்த இட்லி தோசை மாவு உதவிகரமானதாக இருக்கும். நந்தினி பிராண்ட் தரத்திற்கு உலகளாவிய நற்பெயரை பெற்றுள்ளது மற்றும் கர்நாடகா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக புதுமையான தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே நுகர்வோர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிய பொருட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம் என்று KMF நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications