நம் நாட்டில் ஜம்மு அண்ட் காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் சாகுபடி நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த ஆப்பிள் உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பை காஷ்மீர் கொண்டுள்ளது. அங்கு ஆப்பிள் தொழில் மிகப்பெரிய வேலைவாய்ப்பை வழங்குகிறது.
ஆப்பிள் தொழிலில் 35 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆப்பிள் தொழிலில் பங்களிப்பு 9.5 சதவீதமாக உள்ளது. காஷ்மீரில் இருந்து ஆண்டுதோறும் 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

என்னதான் உலகுக்கே ஏற்றுமதி செய்தாலும் காஷ்மீர் ஆப்பிள் துறை கடந்த 15 ஆண்டுகளாக பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அரசியல் உறுதியற்ற தன்மை, காலநிலை மாற்றம், பாரம்பரியமான விவசாயம், கோவிட்-19 மற்றும் ஈரான் மற்றும் அமெரிக்க ஆப்பிள்கள் இறக்குமதி போன்ற காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீர் ஆப்பிள் துறை கடுமையாக பாதிப்பை சந்தித்தது.
இந்த சூழ்நிலையில், உற்பத்தி குறைந்தது, சப்ளை போதுமான அளவில் இல்லாதது போன்ற காரணங்களால் ஆப்பிள் விலை 50 சதவீதம் அதிகரித்து பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பால் ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மாநில ஆப்பிள் தொழிலுக்கு ரூ.240 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மேலும், அம்மாநிலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 8 லட்சம் டன் ஆப்பிள் உற்பத்தியாகும் ஆனால் இந்த ஆண்டு 3 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்தது.
காஷ்மீரில் வானிலை ஏற்றத்தாழ்வு வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் பயிரை பாதித்தது. இது உற்பத்தி வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. கடந்த ஆண்டு காஷ்மீரில் 21 லட்சம் டன் ஆப்பிள் உற்பத்தியாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் இதுவரை 9 லட்சம் டன் மட்டுமே இதுவரை உற்பத்தியாகியுள்ளது.
காஷ்மீரை சேர்ந்த ஆப்பிள் சாகுபடி செய்யும் முகமது அஷ்ரப் வானி கூறுகையில், 2007-08ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இப்போதுதான் ஆப்பிள்கள் சிறந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சப்ளையின் குறிப்பிடத்தக்க பற்றாக்குறையால் விலை உயர்ந்துள்ளது.
ஆப்பிள் உற்பத்தியில் இரண்டு பெரிய உற்பத்தி பகுதிகளான ஜம்மு அண்ட் காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இது சந்தையில் ஆப்பிள் விலை உயர வழி வகுத்தது.
கடந்த ஆண்டு ரூ.700-800க்கு விற்கப்பட்ட குளு ருசி வகை கொண்ட 15 கிலோ பெட்டி தற்போது ரூ.1,300-1,600க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 15 கிலோ எடை கொண்ட சாதாரண சுவையான ஆப்பிள் ரகம் இப்போது ரூ.1,000-1,300க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு சாதாரண ரக ஆப்பிள் ரூ.400-600க்கு விற்கப்பட்டது என தெரிவித்தார். உயர் ரக ஆப்பிள் உற்பத்தி செய்த காஷ்மீர் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications