கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரும் வேலை இழந்து சிரமப்பட்டனர். லாக்டவுன் போடப்பட்டதால் மக்களால் இயல்பாக வெளியில் வர முடியவில்லை. சிலர் தங்கள் வேலையை விட்டு வீட்டிலிருந்து தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர். அப்படித்தான் 47 வயதான கேரளாவை சேர்ந்த பிரிஜித் கிருஷ்ணா என்ற நபரும் 2020-ஆம் ஆண்டு தனது IT வேலையை இழந்தார். அப்போது தனது குடும்பத்திற்காக நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அயராது முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இவர் முந்திரி விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இருப்பினும் இவருடைய சிறிய பண்ணையே அந்த நேரத்தில் நஷ்டத்தில் இருந்தது. சைவ உணவை சாப்பிடுபவர் என்பதால் அதில் புரதச்சத்து குறைவாகவே இருப்பதாக கிருஷ்ணாவிற்கு அவ்வப்போது தோன்றும். இதை தெரிந்து கொண்ட கிருஷ்ணா வேகன்களுக்கு முந்திரியைக் கொண்ட புரோட்டின் ரிச் உணவை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு ஃபுட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்க விரும்பினார்.

அப்படித்தான் 2021-ஆம் ஆண்டில் தனித்துவமான முந்திரி உணவுகளை தயாரிப்பதற்காகவே மலபாரிகாஸ் எல்எல்பி என்ற நிறுவனத்தை தொடங்கினார். இப்போது இந்த ஸ்டார்ட் அப் கேரளா, பெங்களூர், மும்பை போன்ற பகுதிகளில் உள்ள பெரிய உணவு விநியோக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிருஷ்ணாவுக்கு அவருடைய பிசினஸ் பெரும் சவாலாக இருந்தது.
கண்ணூரில் உள்ள இரிட்டியில் முந்திரி விவசாயிகளின் குடும்பத்தில் இருந்து வந்த பிரிஜித், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்திருந்தார். கிருஷ்ணா விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நன்கு தெரிந்தவர்.
முந்திரி விவசாயத்திற்கு மழை ஆகாது. ஏனெனில் கனமழையின் போது முந்திரி பருப்புகள் ஈரப்பதத்தை உறிந்துவிடும். இதனால் முந்திரி பருப்பை பதப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனங்கள் இது போன்ற பருப்புகளை வாங்க மறுக்கும். இதற்கு ஒரு தீர்வு காண கிருஷ்ணா முடிவு செய்தார்.
மார்ச் மே மாதங்களில் பெய்யும் பருவ மழை அறுவடையை வெகுவாக பாதிக்கிறது. இதனால் விளை பொருட்கள் ஈரமாகி, தரம் குறைந்து, நிறம் மங்கி சுவையும் மோசமாகிறது. எனவே முந்திரி முளைக்கும் திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க கிருஷ்ணா பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதோடு மத்திய அரசிடமிருந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான மானியம் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிடைத்தது. அப்படித்தான் முளைக்கட்டிய முந்திரியை வைத்து பல்வேறு டிஷ்களை செய்யத் தொடங்கினார்.
இன்று மலபரிகாஸ் நிறுவனம் சாலட், ஸ்நாக்ஸ், மில்க் ஷேக்குகள் என பலவிதமான சுவையான முந்திரி உணவுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பிலிருந்து ISO மற்றும் HACCP சான்றிதழ்கள் கிடைத்துள்ளது.
முந்திரி கண்டுபிடிப்பு மீதான அவரது ஆர்வத்திற்கு அப்பால், கிருஷ்ணா உள்ளூர் விவசாயிகளையும் ஆதரித்து வருகிறார். குறைந்தபட்சம் 11 உள்ளூர் விவசாயிகளிடமிருந்து ஈரமான முந்திரிகளை வாங்கி, அவற்றை உயர்தர முளைத்த முந்திரியாக மாற்றுகிறார். இவருடைய முயற்சியின் விளைவாக கிருஷ்ணா தற்போது ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய் டர்ன் ஓவர் பார்த்து வருகிறார். முந்திரி விவசாயத்தை விரும்பும் சிறு விவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கி வருவதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications